அனுராதபுர மாவட்டத்தில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அனுராதபுரம் மாவட்டத்தில் தேர்தல் களம் நாளாந்தம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் கலாவெவ , அநுராதபுரம் மேற்கு , அனுராதபுரம் கிழக்கு , கெக்கிராவ , மதவாச்சி,மிஹிந்தலை , ஹொரவப்பொத்தானை ஆகிய ஏழு தொகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மும்முரமாக களத்தில் குதித்துள்ளனர்.
அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கிராமம் கிராமமாக வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து கட்சி சார்ந்த வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை அதிகரித்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் 09 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை மொத்தம் 312 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்தோர் போட்டியிடுகின்றனர்.
அனுராதபுரம் மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகளும் 09 சுயாதீன குழுக்கலும் போட்டியிடுகின்ற நிலையில் சுயாதீன குழுக்களின் ஆதிக்கத்தை தேர்தல் களத்தில் இதுவரை காணக்கூடியதாகவில்லை.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி 344,458 (67.95 •/• ) வாக்குகளைப் பெற்று 07 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 119,788 ( 23.63 •/• ) வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.
மூன்றாம் நிலையாக திகழ்ந்த தேசிய மக்கள் சக்தி 24,482 ( 4.83 •/• ) வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 8,254 (1.63 •/•) வாக்குகளைம் பெற்றுக் கொண்ட போதும் உறுப்பினர்களை பெற்று கொள்ளவில்லை.
கடந்த 2020 பொதுத் தேர்தலில் 24,482 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி சார்பில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க 285,944 (47.37 •/•) வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 202,289 (33.51 /
) வாக்குகளையும் புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர் சின்னத்தில்) போட்டியிட ரணில் விக்கிரமசிங்க 82,152 ( 13. 61 /
) வாக்குகளையும் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ 15,029 (2.49 /
) வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை ஒப்பிடுகையில் வாக்காளர்களின் அதிகரிப்பினாலும் தேசிய மக்கள் சக்திக்கு 261.462 வாக்குகள் அதிகரித்துள்ளன.ஐக்கிய மக்கள் சக்திக்கு 82,501 வாக்குகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட்டு 8.254 வாக்குகளைப் பெற்றாலும் இம்முறை இக்கட்சி பொதுஜன பெரமுன கட்சியினையும் சீலங்கா சுதந்திர கட்சி சார்ந்த குழுவினருடனும் இணைந்து போட்டியிட்டு 82,152 வாக்குகளைப் பெற்றிருந்தன.இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு அதிகரித்துள்ளதாக கருதமுடியாதுள்ளது.
இம்முறை தேர்தலில் 741,862 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை விட இம்முறை 48,288 வாக்குகள் அதிகரித்துள்ளது.
(எம்.ரீ. ஆரிப் – அநுராதபுரம் )