தென்னாபிரிக்காவை வீழ்த்தி 9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணத்தை வெற்றி கொண்டு வரலாறு படைத்தது நியூஸிலாந்து
9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் பலமிக்க தென்னாபிரிக்க மகளிர் அணியை அமிலியா கெர்ரின் சகலதுறை அசத்திலின் மூலம் 32 ஓட்டங்களால் வீழ்த்திய நியூஸிலாந்து மகளிர் அணி முதல் முறையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கி வரலாறு படைத்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் 9ஆவது மகளிர் ரி20 போட்டித் தொடரில் 10 அணிகள் பங்கேற்றிருக்க முதல் சுற்று லீக் ஆட்டம் முடிவில் குழு ஏ இல் இருந்து அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அணிகளும்இ குழு பீ இல் இருந்து மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
அதற்கமைய முதல் அரையிறுதிப் போட்டியில் குழு ஏ இல் முதலிடம்பிடித்த நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணியும் இ குழு பீ இல் 2ஆம் இடம்பிடித்த தென்னாபிரிக்க அணியும் மோதிக்கொள்ள அதில் நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தென்னாபிரிக்க அணி.
பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் குழு பீ இல் முதலிடம்பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியும், குழு ஏ இல் 2ஆம் இடம்பிடித்த நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடாத்த அப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் தடம் பதித்து அசத்தியது.
அதற்கமைய இதுவரையில் மகளிர் உலகக்கிண்ணத்தை வெற்றி கொள்ளாத இரு அணிகளான தென்னாபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து மகளிர் அணிகள் 9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் இன்று (20) இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு டுபாயில் மோதியது. கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்துக் காத்திருந்த இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை நியூஸிலாந்து அணிக்கு வழங்கியது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணிக்கு அமேலியா கெர் 43 ஓட்டங்களையும், புரூக்கி ஹெலிடே 38 ஓட்டங்களையும், சுசி பெடர்ஸ் 32 ஓட்டங்களையும் விரைவாகப் பெற்றுக் கொடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் நொன்குலுலுகோ 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் நியூஸிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 159 ஓட்டங்களைப் பெற்றார் உலகச் சம்பியன் மகுடம் என்ற நிலையில் பதிலுக்கு களம் நுழைந்த தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்ப வீராங்கணைகளான லவுரா வெல்வோர்ட் மற்றும் டஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் அரைச்சதம் கடந்த இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்தனர். இதில் லவுரா வெல்வோர்ட் 33 ஓட்டங்களுடனும், பிரிட்ஸ் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் கொடுத்தனர்.
இதனால் ஓட்டங்களை பெற்றுக் கொள்ள தடுமாறிப் போன தென்னாபிரிக்கா மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 126 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இதனால் நியூஸிலாந்து அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் 9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணத்தை முதன் முறையாக வெற்றி கொண்டு வரலாறு படைத்தது. பந்துவீச்சில் அமிலியா கெர் மற்றும் ரொஸ்மெரி மெய்ர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் அள்ளிச் சுருட்டினர்.போட்டியின் நாயகியாக துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய அமிலியா கெர் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)