சுனாமி வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு கையளிக்க ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்திற்கு நன்றி!
சமூக நீதிக் கட்சி
2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரலையானது, இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களையும், உடமைகளையும் காவு கொண்டது.
அந்த நேரத்தில் சர்வதேசத்திலிருந்து நீட்டப்பட்ட பல உதவிக்கரங்களில் ஒன்றாக சவூதி அரசு, அம்பாறை நுறைச்சோலை பிரதேசத்தில் 500 வீடுகளை நிர்மாணித்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு உதவ முன்வந்தது.
இந்த வீட்டுத் திட்டமானது 2011 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால் இவ்வீட்டுத்திட்டம் உரிய பயனாளர்களுக்கு வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வந்தது.
சமூக நீதிக் கட்சி 16.08.2024 வெளியிட்ட ஜனாதிபதித் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிராந்தியப் பிரச்சினைகளில் ஒன்றாக நுறைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தைச் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையில் சுனாமி வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு கையளிக்க ஜனாதிபதி தோழர் அநுர குமார திஸாநாயக்க எடுத்துள்ள தீர்மானத்தையிட்டு சமூக நீதிக் கட்சி மகிழ்ச்சி அடைவதுடன், தனது நன்றிகளையும் ஜனாதிபதிக்குத் தெரிவித்துக் கொள்கிறது.
அத்தோடு இவ் வீட்டுத்திட்டமானது தற்போது பாவனைக்கு உகந்த நிலையில் இல்லாத படியினால் அதனை பாவனைக்கு உகந்த முறையில் புணர்நிர்மானம் செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்குமாறும் ஜனாதிபதியிடம் சமூக நீதிக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
(அஷ்ரப் ஏ சமட்)