அசலங்க மற்றும் மதுஷ்க ஆகியோரின் இணைப்பாட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகளை விரட்டியடித்த இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சரித் அசலங்க மற்றும் நிஷான் மதுஷ்கவின் அசத்தலான துடுப்பாட்டம் கைகொடுக்க டக்வேர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது. இதில் இன்று இடம்பெற்ற முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீகள் அணி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. மேலும் இலங்கை அணி சார்பில் நிஷான் மதுஷ்க இன்றைய தினம் இலங்கை அணி சார்பில் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார்.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆரம்பத்தில் ஓட்டங்களைப் பெறத் தடுமாற்றம் கண்டது. ஒரு கட்டத்தில் 100 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றம் கண்டது. இந்நிலையில் 5ஆவது விக்கெட்டில் ரொத்தர்பேர்ட் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் இணைந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டம் ஒற்றைப் பகிர மேற்கிந்தியத் தீவுகள் அணி 38.3 ஓவர்களில் 4விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருக்க மழை ஆட்டத்தில் குறுக்கிட்டது. தொடர்ந்து 8 மணி ரை மழையின் தாக்கம் இருந்தமையால் மேற்கிந்தியத் தீவுகளின் இன்னிங்ஸ் நிறைவு செய்யப்பட்டது, துடுப்பாட்டத்தில் ரொத்தர்பேர்ட் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 74 மற்றும் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் போட்டி இரவு 8.45 மணிக்கு ஆரம்பமாக டக்வேர்த் லூயிஸ் முறையில் இலங்கை அணிக்கு 37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதற்கமைய இலங்கை அணி துடுப்பாட்டத்தை ஆரம்பிக்க முதல் 3 விக்கெட்டுக்களாக அவிஸ்க (5), குசல் மென்டிஸ் (13) மற்றும் சதீர சமரவிக்ரம (18) என நிலைக்காமல் பெவிலியன் திரும்பினர். இந்நிலையில் 4ஆவது விக்கெட்டில் அறிமுக வீரரான நிஷான் மதுஷ்கவுடன் இணைந்து கொண்ட சரித் அசலங்க அதிரடியை ஆரம்பித்தார்.
மிகச் சிறப்பாக ஆடிய இருவரும் தத்தமது அரைச்சதங்களை கடந்ததுடன் நிஷான் மதுஷ்க கன்னிப் போட்டியில் கன்னி அரைச்சதம் கடந்து அசத்தி 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த இருவருக்கிடையிலான இணைப்பாட்டம் 137 ஓட்டங்களாகும். பின்னர் சற்று நேரத்தில் நம்பிக்கை கொடுத்த அசலங்க 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கமிந்து மெண்டிஸ் அதிரடியில் 30 ஓட்டங்களை அடித்துக் கொடுக்க இலங்கை அணி 31.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்று டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.போட்டியின் நாயகனாக சரித் அசலங்க தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)