பேருவளை தலைவர் வெற்றிக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி.
பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கம் “தலைவர் வெற்றி கிண்ணத்திற்காக மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் முற்பகுதியில் நடாத்தவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வாக கிண்ணம் அறிமுக நிகழ்வு பேருவளை மககொடை ஐ.எல்.எம்.சம்சுதீன் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.றிஸ்வான் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கத் தலைவர் ரிஸ்வான் ஹாஜியார் இந்த சுற்றுப்போட்டியை நடத்த தனது சொந்த நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதியை அன்பளிப்பு செய்துள்ளார் அதற்கான காசோலையும் இதன் போது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 20 விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள்,செயலாளர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த சுற்றுப்போட்டியின் ஓர் அங்கமாக பாடசாலை உதைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையே கண்காட்சி உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றும் நடாத்தப்படவுள்ளதோடு சுஹைர் ஹஜ் டிராவல்ஸ் உரிமையாளர் ஏ.பி.எம்.ஸுஹைர் ஹாஜியார் இதற்கு அனுசரணை வழங்க முன் வந்துள்ளார்.
சங்க செயலாளர் எம்.ஆர்.எம்.ஸினான் வரவேற்புரை நிகழ்த்தியதோடு சங்க உப தலைவர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.எம்.பதியுத்தீன் அறிமுக உரையாற்றினார்.
பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை அது கண்டுள்ள வளர்ச்சி எதிர்நோக்கிய சவால்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
சங்கத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் தற்போதைய தலைவரின் தியாகத்தையும் அவர் பெரிதும் பாராட்டினார்.
சங்க தலைவர் றிஸ்வான் ஹாஜியார் உரையாற்றும் போது கூறியதாவது என்மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக சங்கத்தின் தலைவராக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை தேரிவு செய்தீர்கள் தலைவர் பதவியை ஏற்ற முதல் அல்லாஹ்வின் கிருபையால் இப்பகுதியில் உதைப்பந்தாட்ட துறையை கட்டியெழுப்ப வேண்டிய முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறேன். உங்கள் அனைவரினதும் முழு ஒத்துழைப்பு காரணமாக எனது தலைமைத்துவ பணியை செவ்வனே முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. தலைவர் கிண்ணத்திற்கான போட்டியை நடத்த முழுச் செலவையும் நானே பொறுப்பேற்றேன். தலைவர் பொறுப்பை கையேற்ற சமயம் நான் உங்கள் மத்தியில் வாக்குறுதி ஒன்றை அளித்தேன் அந்த வாக்குறுதியை மீறாமல் தொடர்ந்தும் பணி செய்கிறேன்.
பேருவளையில் உதைப்பந்தாட்டத்துறையை கட்டியெழுப்ப வேண்டிய எனது முழுமையான பங்களிப்பை வழங்கி வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர் உரையாற்றும் போது பேருவளை உதைப்பந்தாட்ட சங்கத்தையும் அதன் தலைவர் உட்பட உறுப்பினர்களையும் பெரிதும் பாராட்டினார்.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் பேருவளை உதைப்பந்தாட்ட சங்கம் மிக நெருக்கமான செயல்படுவதையும் அவர் ஞாபகமூட்டினார்.
உதைப்பந்தாட்ட துறையை முன்னேற்றி தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டி நாம் முழுமூச்சுடன் தைரியமான செயல்படுகிறோம் என்றார்.
பேருவளை உதைப்பந்தாட்டச் சங்க பொருளாளர் ஏ.ஜே.எம்.அக்பர் மற்றும் அதன் முக்கியஸ்தர்களான ஜெஸூக் அஹமட், முஹம்மத் ஸனூபர்,முஹம்மத் இஷாக்கியான்,
அதிபர் பாத்திமா சிஹானா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)