விளையாட்டு

இலங்கையின் அதிவேக வீரனாக மகுடம் சூடிய கல்பிட்டி நிர்மலமாதா மாணவன் மலித் தருஷன்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 18 வயதிற்குட்பட்ட 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கல்பிட்டி நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலய மாணவன் மலித் தருஷன் முதலிடம் பிடித்து வரலாறு படைத்தார்.

கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையில் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகள் இன்று (19) கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய இன்று (19) இடம்பெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வடமேல் மாகாணத்தின் சம்பியனான கல்பிட்டி நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலய மாணவன் டபில்யூ. சீ. டீ. மலித் தருஷன் பங்கேற்று தகுதிகாண் போட்டிகளில் முதலிடம் பெற்று, இறுதிப் போட்டிக்குள் தடம் பதித்தார்.

பின்னர் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் போட்டித் தூரத்தை 10.96 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பெற்றதுடன், தனது அதி சிறந்த நேரப் பெறுபேற்றையும் நிலைநிறுத்தி வரலாறு படைத்தார்.

மேலும் 61 வருட கல்பிட்டி நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலய வரலாற்றில் முதல் முறையாக மெய்வல்லுனர் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் கிடைக்கின்றமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவ் வெற்றிக்கு துணை நின்ற அப்பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை எச்.பி.கே. ராஜபக்ஷ மற்றும் அதிபர் சுதர்சன மற்றும் அம் மாணவனின் பெற்றோருக்கும் பாடசாலை சமூகமும், கல்பிட்டி வாழ் மக்களும் தமது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளகின்றமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *