சுழலில் சிக்கியது இங்கிலாந்து; அசத்தல் வெற்றியுடன் தொடரை சமன் செய்தது பாகிஸ்தான்
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களான நுஹ்மான் அலி மற்றும் சாஜித் ஆகியோரின் மிரட்டலான பந்து வீச்சு கைகொடுக்க 152 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 1:1 என சமன் செய்தது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் 2ஆவது போட்டி கடந்த 15ஆம் திகதி முல்டானில் ஆரம்பித்திருந்தது. இப்போட்டியில் முன்னாள் அணித்தலைரான பாபர் அஸாம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கம்ரான் குலாம் அறிமுகம் பெற்றிருந்தார்.
இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அறிமுக வீரரான கம்ரான் குலாமின் கன்னி சதத்தின் உதவியுடன் 366 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. கம்ரான் குலாம் 118 ஓட்டங்களையும், சைம் ஐயூப் 77 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் ஜெக் லீச் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு சாஜிட்கான் மிகுந்த இடையூறு கொடுத்து 7 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்ட அவ்வணியால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 291 ஓட்டங்களையே பெற முடிந்தது. துடுப்பாட்டத்தில் டெக்கட் 114 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு நம்பிக்கை கெதடுத்தார்.
தொடர்ந்து 75 ஓட்டங்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில் அஹா சல்மான் 63 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். பந்துவீச்சில் சொகைப் பசீர் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனடிப்படையில் 297 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி 2ஆவது இன்னிங்ஸிற்காகக் களம் நுழைந்த இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளரான நுஹ்மான் அலி விரைவாக பெவிலியன் அனுப்பி வைக்க அவ் அணியால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. துடுப்பாட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார் .பந்துவீச்சில் நுஹ்மான் அலி 8 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 152 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றதுடன் தொடரை 1:1 என சமன் செய்தது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி ராவெல்பிண்டியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)