உள்நாடு

புதிய பாராளுமன்றத்துக்கு அனுபவமுள்ளவர்களைத் தேர்ந்தெடுங்கள்.

நாடு தொடர்ந்தும் சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளை நிர்வகித்து அனுபவமுடையவர்களாக காணப்படும் கடந்த அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்களை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மல் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட உரையை ஆற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதைத் தெரிந்த தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பது அவசியம்.

2027ஆம் ஆண்டுக்குள் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்த ஆரம்பிக்கும் போது, தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாக உள்ள அரச வருமானத்தை 15 வீதமாக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும். அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு வீத பொருளாதார வளர்ச்சி எட்ட வேண்டும்.

நீங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி அனுபவம் இல்லையென்றால் நாட்டின் இலக்குகளை அடைவதில் தோல்வியடைவீர்கள்.

அனுபவம் வாய்ந்த எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முக்கியமான காலக்கட்டத்தில் தேசத்தை வழிநடத்தும் நிபுணத்துவம் கொண்ட வேட்பாளர்களுக்கு தமது பெறுமதியான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *