“தேசியப் பட்டியல் ஹக்கீமின் தேய்ந்துபோன வாக்குறுதிகளில் ஒன்று..!” -ஜனநாயக ஐக்கிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் லியாப்தீன் கடும் தாக்கு
காலத்துக்குக் காலம் ஒவ்வொரு தேர்தல்களின்போதும் தேசியப் பட்டியல் வாக்குறுதி மூலமாக யாரையேனும் ஏமாற்றிக்கொண்டிருப்பது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் வாடிக்கையாகிப் போய்விட்டதாக ஜனநாயக ஐக்கிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் லியாப்தீன் கடுமையாக விமர்சித்துள்ளார்
இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, சம்மாந்துறை, பொத்துவில் என்று ஏகப்பட்ட பிரதேசங்களுக்கும் , மட்டக்களப்பின் கல்குடா தொகுதியின் பல்வேறு பிரதேசங்களுக்கும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்றுத் தரப்படும் என்று பல்வேறு கட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாக்குறுதி அளித்துள்ளார்.
அக்கட்சியின் கல்குடாதொகுதி இளைஞர் அணி அமைப்பாளராக இருந்தவன் என்ற வகையில் ஹக்கீமின் வாக்குறுதிகள் குறித்தும், திருகுதாளங்கள் குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் எப்போதும் வாக்குறுதிகளை மீறுவதுடன், எந்தவொரு கட்டத்திலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக நடந்து கொண்டதும் இல்லை.
அதே பழக்கத்தை அவர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் கைக்கொள்ளப் பார்க்கின்றார். அதன் ஒரு கட்டமாகவே வழமைபோன்று இம்முறையும் கல்குடா தொகுதிக்கும்,. கல்முனையைச்சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கும் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்போவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
தேசியப் பட்டியல் நடைமுறைகளின் பிரகாரம் தேர்தல் முடிந்தவுடன் ஒருவருக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாயின் அவர் ஒன்றில் தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தேசியப்பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் ஹக்கீம் எவ்வாறு தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தை வழங்க முடியும்? வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசியே அஷ்ரப் வளர்த்தெடுத்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஹக்கீம் அழித்துக் கொண்டிருக்கின்றார். அவர் இனியாவது மாறவேண்டும். உண்மையைப்பேசி நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
ஜனநாயக ஐக்கிய முன்னணி வேட்பாளர்களாகிய நாங்கள் எந்தவொரு ஏமாற்று அரசியலுக்கும், இனவாத போக்குகளுக்கும் எதிரானவர்கள். அதன் காரணமாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு பழைமையான அரசியல் கட்சியிலும் போட்டியிடாது தனித்துப்போட்டியிடத் தீர்மானித்தோம்.
எங்கள் நேர்மையான இலட்சியங்களுக்கும், ஐக்கியம், ஜனநாயகம், அபிவிருத்தி, நல்லிணக்கம் என்ற எங்கள் கொள்கைகளுக்கு மக்கள் நிச்சயம் நல்லதொரு அங்கீகாரத்தை இந்த்த் தேர்தலில் வழங்குவார்கள் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும் என்றும் வேட்பாளர் லியாப்தீன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்