உள்நாடு

ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்..!

ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 5 அமைச்சர்கள் பதிவியேற்றுக் கொண்டனர். 

நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில்,மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 என மொத்தம் 49 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைக்கும் பணிகளை தேசிய மாநாடு கட்சி முடுக்கி விட்டு உள்ளது. அதன்படி கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 10ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா நடத்திய இந்த கூட்டத்தில் அனைத்து புதிய எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது.

இதையடுத்து, கடந்த 11ம் தேதி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை உமர் அப்துல்லா சந்தித்தார். அப்போது தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா  பதவியேற்க துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இந்த பதவியேற்பு விழா ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 5 அமைச்சர்கள் பதிவியேற்றுக் கொண்டனர். 

இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி, என்சிபி சார்பில் சுப்ரியா சூலே, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் தேசிய மாநாடு கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *