கம்பஹா மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர்களுக்கே அதனைத் தீர்க்க முடியும்.சிலிண்டர் வேட்பாளர் ஏ.எச்.எம்.நெளஷாத்
கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் வேட்பாளர்கள் பெரும்பாலோர் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாததால், மாவட்ட மக்களின் பிரச்சனைகளை அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது எனவும், இது மக்கள் சேவையில் பாதகமாக அமையும் எனவும், வத்தளை மாபோலை முன்னாள் நகர சபைத் தலைவர் மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஏ.எச்.எச். நௌசாத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அனைத்து தேர்தல்களிலும், வெளிப்புறம் இருந்து கொண்டு வரும் பல்வேறு வேட்பாளர்கள், கம்பஹா மக்களின் உண்மையான பிரச்சனைகளைக் கவனிக்காமல், தங்கள் தனிப்பட்ட மற்றும் கட்சியின் இலக்குகளை முன்னிறுத்துகின்றனர். இத்தகைய வேட்பாளர்கள் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையையும், சுகாதார, கல்வி, வர்த்தக, தொழில்நுட்ப வசதிகளையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கக்கூடும். அதனால், கம்பஹாவைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய ஒவ்வொருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவும், அப்பகுதி மக்களின் பிரச்சனைகளில் ஆழமாக ஈடுபடும் பொறுப்புணர்வும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்,” என்றார்.
நௌசாத்
மேலும் கூறியதாவது, “நான் கம்பஹா மாவட்டத்தில் பிறந்தும் வளர்ந்தும், இங்கு உள்ள மக்கள் மற்றும் அவர்களது சிரமங்களை நன்கு அறிந்தும் இருக்கிறேன். எனவே, என் வேட்புமனு ஒரு உண்மையான கம்பஹா மக்களின் குரல் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி, மாவட்டத்தின் மேம்பாட்டுக்கான திட்டங்களையும் முன்னெடுக்க முயற்சிக்கிறேன்,” என அவர் வலியுறுத்தினார்.
(ஏ.சி பௌசுல் அலிம்)