“நல்ல” உறக்கம் என்றால் என்ன
பெரியவர்களுக்கு ஒரு இரவுக்கு ஏழு முதல் எட்டு அல்லது ஒன்பது மணிநேரம் உறக்கம் தேவை என்று அடிக்கடி சொல்லக் கேட்கிறோம். ஆனால் நல்ல உறக்கம் என்பது எத்தனை மணிநேரம் உறங்குகிறோம் என்பதைப் போலவே எமது உறக்கத்தின் தரத்தை பொருத்தும் இருக்கிறது. ஒவ்வொரு செயலில் ஒவ்வொரு பொருளில் தரம் இருப்பது போன்று உறக்கம் அதன் தரத்தில் தீர்மானிக்க படுகிறது.
தரமான உறக்கம் அல்லது நல்ல உறக்கத்தின் தன்மை பெரும்பாலான மக்கள் படுக்க ஆரம்பித்து (சுமார் 30 நிமிடங்களுக்குள்) உறக்கம் வருவதில் தொடங்குகிறது.
▪உறங்கிய பிறகு இடைக்கிடையே எழுந்திருக்காமல் நீண்ட நேரம் உறங்குவது,
▪ஆரோக்கியமாக விழித்தெழுவது,
▪விழித்தெழுந்ததும் நல்ல புத்துணர்வை பெறுவது,
▪அன்றைய நாளுக்கு சுறுசுறுப்புடன் தயாராகுவது
போன்ற எல்லாம் நல்ல உறக்கத்தின் சில முக்கியமான அறிகுறிகளாகும்.
நீங்கள் ஒரு இரவில் குறைந்தது ஏழு மணிநேரம் புத்துணர்ச்சியூட்டும் தூக்கத்தைப் பெறுகிறீர்கள் என்றால் குறிப்பாக பகல் காலங்களில் அதிக தூக்கத்தை அல்லது தூக்க மயக்கத்தை உணரும் நிலையை அனுபவிக்க மாட்டீர்கள். பகல் நேரங்கள் எப்பொழுதும் ஊக்கம் உற்சாகம் கொண்டதாக இருக்கும்.
ஆனால்
▪நீங்கள் பகல் நேரத்தில் உடல் ரீதியாக சோர்வை உணர்கிறீர்கள் என்றால்….
▪பகல் நேரங்களில் தூங்க வேண்டும் என்ற உணர்வை அடிக்கடி உணர்கிறீர்கள் என்றால்..
▪அப்படியே உறங்கினாலும் உங்கள் உறக்கம் புத்துணர்ச்சி தருவதாக இல்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றால்…
உங்கள் இரவுறக்கத்தில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஒழுங்கீனங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம்.
இங்கு குறிப்பிட்டது போன்ற ஏதேனும் சிக்கல்களை நீங்கள் அனுபவிப்பதாக இருந்தால் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை நாடி தகுந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது என்பதை கரிசனையுடன் கருத்தில் நினைவுபடுத்துகிறோம்.
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்