உலகம்

முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர்

பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தின் ராமேஸ்வரம் மாவட்டதில் எளிமையான குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தவர், டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் ‘ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படும் அப்துல் கலாம், இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ.வில் பணியாற்றி, பல்வேறு முக்கிய ஏவுகணை திட்டங்களுக்கு தலைமை தாங்கினார். பொக்ரான் அணுகுண்டு சோதனையில் தொழில்நுட்ப ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அப்துல் கலாம் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது.
இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதிவியேற்ற பிறகும், பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திப்பதையும், அவர்களுடன் கலந்துரையாடுவதையும் அப்துல் கலாம் வழக்கமாக கொண்டிருந்தார். அப்துல் கலாம் மறைந்த பிறகு, அவரது பிறந்த தினமான அக்டோபர் 15ம் தேதியை இளைஞர் மறுமலர்ச்சி தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில், ‘ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாமின் 93வது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூறும் வகையில் எக்ஸ் தளத்தில் அப்துல் கலாம் உடனான தனது சந்திப்புகள் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் கூறியிருப்பதாவது;புகழ்பெற்ற விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள். அவரது தொலைநோக்கு பார்வையும், எண்ணங்களும் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய பெரிதும் உதவும். அப்துல் கலாம் இயல்பாகவும், எளிமையாகவும் இருந்தார். இந்த உலகில் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர்; வாய்ப்புகளை தேடுபவர்கள் மற்றும் சவால்களை தேடுபவர்கள். அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றார். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *