விளையாட்டு

தேசிய உதைப்பந்தாட்டத்தில் 2ஆம் இடம் பெற்று வரலாறு படைத்தது கற்பிட்டி அல் அக்ஸா

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தட்ட தொடரின் 20 வயதுக்குற்பட்ட போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உதைப்பந்தாட்டத் தொடர் அனுராதபுரத்தில் கடந்த 11, 12, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அனுராதபுரத்தின் பல மைதானங்களில் இடம்பெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 16, 18 மற்றும் 20 வயதிற்குற்பட்ட பிரிவுகளிலும், அதே போல் மகளிர் பிரிவில் 15,17 மற்றும் 19 வயதுப்பிரிவுகளிலும் இடம்பெற்றிருந்தது. இதில் ஆண்கள் பிரிவின் 20 வயதிற்குற்பட்ட போட்டித் தொடருக்கு மாகாண மட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த பாடசாலை அணிகள் தெரிவாகியிருக்க வடமேல் மாகாணத்திலிருந்து சம்பியன் பட்டத்துடன் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி பங்கேற்றிருந்தது,

இத் தொடர் விலகல் முறையில் இடம்பெற இத் தொடரில் மொத்தம் 24 பாடசாலை அணிகள் பங்கேற்றிருந்ததுடன் அவ் அணிகள் இரு குழுக்கலாகப் பிரிக்கப்பட்டு அதில் அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி குழு 2இல் இடம்பெற்றிருந்தது. இந்நிலையின் முதல் சுற்று போட்டியில் மாவனெல்லை சாஹிரா தேசிய பாடசாலை அணியை வீழ்த்தி 2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது.

பின்னர் 2ஆம் சுற்று ஆட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பலமிக்க அணியான கிண்ணியா மத்திய கல்லூரி அணியை 2:0 என வீழ்த்தி காலிறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பின்னர் காலிறுதி ஆட்டத்தில் கந்தானை டி மெசிநோட் கல்லூரி அணியை பெணால்ட்டி உதையில் 3:0 என வீழ்த்தி அரையிறுதிக்குள் தடம் பதித்தது கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட அணி.

இந்நிலையில் நேற்று முன்தினம் (14) காலை இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி காலி மஹிர்ந கல்லூரி அணியை எதிர்த்தாடியது. இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் காலி மஹிந்த கல்லூரி அணி முதல் கோலை உட்செலுத்தி போட்டியில் 1:0 வெற்றி பெற்ற காலி மஹிந்த கல்லூரி இறுதிக்குள் நுழைய, போராடித் தோற்ற அல் அக்ஸா தேசிய பாடசாலை 3ஆம் இடத்திற்கான போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் மற்றைய அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பானம் மத்திய கல்லூரி அணியும் , யாழ்ப்பானம் ஹென்றிக் கல்லூரியும் மோதிக்கொள்ள அதில் ஹென்றிக்ஸ் கல்லூரி வெற்றி பெற்ற போதிலும் அவ் அணி சட்ட திட்டங்களை மீறி வீரர்களை களம் இரக்கியமையால் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டு, யாழ் மத்திய கல்லூரிக்கு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

பின்னர் இறுதிப் போட்டி இடம்பெற அதில் யாழ் மத்திய கல்லூரி அணி 2:1 என காலி மஹிந்த கல்லூரி அணியை வெற்றி கொண்ட போதிலும் காலி மஹிந்த கல்லூரியால் யாழ் மத்திய கல்லூரிக்கு எதிராக முன்வைக்கப்பற்ற சட்ட திட்ட மீறல் குற்றச்சாட்டு நிறூபிக்கப்பட யாழ் மத்திய கல்லூரியும் தொடரிலிருந்து வெளியேற்றப்பட இத் தொடரின் சம்பியனாக காலி மஹிந்த கல்லூரி தெரிவானதுடன், 2ஆம் இடம் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை வசமானது.

அத்துடன் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக உதைப்பந்தாட்ட அணி தேசியமட்டத்தில் 2ஆம் இடம்பெற்ற சந்தர்ப்பமாக இது பதியப்பட்டதுடன், அன்றைய இச் சாதனை வீரர்கள் கற்பிட்டிப் பிரதேச மக்களால் மிகக் கோலாகளமாக வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *