விளையாட்டு

நான்கிலும் தோற்று நடையைக் கட்டியது இலங்கை மகளிர்

மகளிர் உலகக்கிண்ண ரி20 தொடரின் முதல் சுற்றின் இலங்கை எதிர் கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதி லீக் போட்டியிலும் 8 விக்கெட்டுக்களால் தோற்று நடையைக் கட்டியது இலங்கை மகளிர் அணி.

9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ண தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்றது. இதல் குழு ஏ இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தான் எதிர்கொண்ட பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகளிடம் தோற்று உலகக்கிண்ண வாய்ப்பை இழந்திருந்தது. இந்நிலையில் மிகுதியாக இருந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதி லீக் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என்ற முனைப்பில் நேற்று (12) சார்ஜா மைதானத்தில் களம் கண்டது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதற்கமைய அணியின் தலைவியான சமரி அத்தபத்து அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, ஏனைய துடுப்பாட வீராங்கனைகள் பொறுப்பின்றி துடுப்பாடி விரைவாக பெவிலியன் திரும்ப இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விளையாட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் கேர் மற்றும் கெஸ்பரக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் மிக இலகுவான 116 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த நியூசிலாந்து அணிக்கு முன்வரிசை வீரர்களான பிலிம்மர் அரைச்சதம் கடந்து 53 ஓட்டங்களையும், அமெலியா கெர் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் விளாசிக் கொடுக்க நியூஸிலாந்து மகளிர் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 118 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த தோல்வியுடன் தொடராக 4ஆவது தோல்வியை சந்தித்த இலங்கை மகளிர் அணி 9ஆவது ரி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து நடையைக் கட்டியமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *