புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களை ஏமாற்றும் அரசியல் கலாசாரத்திற்கு இந்தமுறை முற்றுப்புள்ளி வைப்போம் – ஆப்தீன் எஹியா
தேர்தல் காலங்களில் புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றுகொண்ட பின் அவர்களை கைவிடுகின்ற பெரும்பான்மைக் கட்சிகளின் அரசியல் கலாசாரத்திற்கு இந்தமுறை முற்றுப்புள்ளி வைப்போம் என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட தலைமை வேட்பாளரான வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் மைக் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பொரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் சிறுபான்மை பிரிதிநிதியொருவர் வெற்றிபெற முடியாது என்பதை கடந்த கால வரலாறுகள் மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றன.
இம்முறையும் சிறுபான்மைக் கட்சிகளை இணைத்துக்கொண்டு பெரும்பான்மைக் கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இதனால், புத்தளம் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. எமது மொத்த வாக்குகளையும் அவர்கள்தான் அள்ளிக்கொண்டு பாராளுமன்றத்திற்கு செல்லப் போகிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் பெரும்பான்மையினரின் திட்டங்களை தவிடுபொடியாக்கி, புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் சார்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மைக் சின்னத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி ஊடாக பெற்றுக்கொள்ள நாம் ஒரு பலமான அணியுடன் களமிறங்கியிருக்கிறோம்.
மக்களின் நம்பிக்கையை எமது கட்சி எப்போதும் பாதுகாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஐக்கிய ஜநயாக குரல் கட்சி மக்களின் குரலாகவே, மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கட்சி. இதன் மூலம் புத்தளம் மக்களின் குரலாக நாம் எப்போதும் இருப்போம்.” என்றார்.
(ரஸீன் ரஸ்மின்)