மட்டு மத்தி கல்வி வலயத்தின் முதலாவது கணிதப் பூங்கா காவத்தமுனை அல் அமீனில் திறந்து வைப்பு.
கணித எண்ணக்கருக்களை மாணவர்களிடையே விருத்தி செய்யும் வகையில் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியிதவினூடாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பிரிவிலுள்ள காவத்தமுனை அல் வித்தியாலய கணிதப் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது.
அதிபர் ஏ.ருபாய்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் (நளீமி) பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
கற்றல் கற்பித்தல் சாதனங்களுடன் மாணவர்களது கற்றல் பேறுகளை வெளிக்கொண்டு வரும் வகையிலான இந்த கணிதப் பூங்கா மட்டு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் சிபாரிசின் கீழ் பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.பீ.எம்.அலியாரின் (அஷ்ஹரி) மேற்பார்வையில் முன்னாள் பிரதி அதிபரும் கணிதப்பாட ஆசிரியருமான ஆர்.ஜுனைதீனின் வழிகாட்டலில் பெற்றோர்களது பங்களிப்புடன் சிறந்த முறையில் வடிவமைப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட காத்தான்குடி,ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி கல்வி கோட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட குறித்த செயற்திட்டத்தினை ஓட்டமாவடி கோட்ட பாடசாலையான அல் அமீன் வித்தியாலயமே முதன் முதலாக நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றமீஸ், ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எம்.எம்.தாஹிர், ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், அல் அமீன் வித்தியாலய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிருவாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்.