கட்டுரை

சிறுவர்கள் மீதான அழுத்தங்களும் குறையட்டும்

சிறுவர்கள் தான் இந்த உலகை அழகு படுத்துகின்றார்கள். ஆகாயத்தை விண்மீன்களும் எரி நட்சத்திரங்களும் அழகு படுத்துவது போல இந்த உலகம் இயற்கையாகவே அழகு பெறுவது குழந்தைகள் இருப்பதால்தான். குழந்தைகளின் மழலை மொழியும் சுட்டித்தனமும் காண்போரை கவர செய்யும். குழந்தைகள் மீதான அன்பை உருவாக்கிவிடும்.

அல்குர்ஆன் குழந்தைகள் பற்றி அதிகமாக பேசுகின்றது. குழந்தைகளோடு உரையாடிய சம்பவங்கள் பலதும் அல்குர்ஆனில் காணப்படுகின்றன. நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தன் மகன் யூசஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு உரையாடிய சம்பவம், குழந்தை மூஸா விடயத்தில் அவரது அன்னை நடந்து கொண்ட விதம், குழந்தை ஈசஸா விடயத்தில் அவரது தாயார் மர்யம் நடந்து கொண்ட விதம், சிறுவர் இஸ்மாயில் விடயத்தில் தந்தை இப்ராஹிம் நடந்து கொண்ட விதம், நபி ஸகரியா தனது மகன் யஹ்யா விடயத்தில் நடந்து கொண்ட விதம் போன்றன அல்குர்ஆன் பேசுகின்ற குழந்தைகள் சார்ந்த விவகாரங்களே

சர்வதேச சிறுவர் தினத்தில் மாத்திரம் சிறுவர்களை பேசி சிறுவர்களது உரிமைகளை உணர்வுகளை பகிரங்கமாக கொட்டி விடுவதால் அவர்களுக்கான முழு உரிமையும் கிடைத்து விடுவதில்லை. குழந்தைகள் மீது அன்பு காட்டுவது கருணை மழை பொழிவது என்பது அனைத்து விதமான அழுத்தங்களில் இருந்தும் அவர்களை விட்டு வைப்பது தான்.

யுத்தங்களால் பாதிக்கப்படுவதும் குழந்தைகளே சிறுவர் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்படுவதும் குழந்தைகளே மந்த போசனையால் பாதிக்கப்படுவதும் குழந்தைகளே மன அழுத்தங்களால் பாதிக்கப்படுவதும் குழந்தைகளே இப்படியாக வீட்டுச் சூழலிலும் வீட்டுக்கு வெளியிலும் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றவர்களாக குழந்தைகள் காணப்படுகின்றன. எனவே இந்த குழந்தைகளுக்கான நீதியை நியாயத்தை நிலையான கல்வியை பாடசாலைகள் கூடாக வேணும் பெற்றுக் கொடுக்க வேண்டும் பாடசாலைகளில் அவர்கள் கழிக்கின்ற கிட்டதட்ட 6 மணித்தியால நேரத்திலாவது அவர்கள் மிக சந்தோசமாக இருந்து கல்வியை பெற வேண்டும் கற்றல் மகிழ்ச்சிக்குரியது மகிழ்நிலையிலிருந்து கற்கின்ற பொழுது தான் அது மனதுக்கு இதமாக அமைதி தரக்கூடியதாக உள்ளத்தை உயிர்ப்பூட்டக்கூடியதாக அமையும்.

ஆனால் இன்று விளையாட்டு பருவத்தில் தங்களது விளையாட்டு காலத்தை கழிக்க வேண்டிய குழந்தைகள் புத்தக சுமைகளோடு பாடச் சுமைகளோடு வீட்டு வேலை சுமைகளோடு விளையாட நேரமின்றி தத்தமது உணர்வுகளை வெளிக்காட்ட நேரமின்றி அழுத்தங்களை மாத்திரம் சுமந்து கொண்டு தத்தமது இன்பங்களை வெளிப்படுத்த, குதூகலத்தை வெளிப்படுத்த எந்த விதமான சந்தர்ப்பமும் இல்லாமல் நோயாளிகளாக, ஆரோக்கியம் இழந்தவர்களாக உடல் பலவீனமடைந்தவர்களாக திறமைகளை வெளிக்காட்ட விரும்பாதவர்களாக காணப்படுகின்றனர்

இந்த வகையில் ஆறு வயது முதல் 18 வயது வரை பாடசாலை செல்லக்கூடிய குழந்தைகள் விடயத்தில் சமூகம் கவனம் செலுத்த வேண்டியது போலவே சட்டமும் கவனம் செலுத்த கடமைப்பட்டிருக்கின்றது. சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் குறைக்கப்பட வேண்டும் அவர்கள் மீதான கல்வி சார்ந்த அழுத்தங்களும் குறைக்கப்பட வேண்டும். பாடங்கள் சார்ந்த பயிற்சிகள் சார்ந்த அழுத்தங்களும் குறைக்கப்பட வேண்டும் அவர்களுக்கு விளையாடுகின்ற அவர்களது ஆளுமையை விருத்தியாக்கின்ற உடல் உள விருத்தி சமூக சிந்தனை விருத்தி ஆன்மீக விருத்து போன்றவற்றை முழுமையாக ஏற்படுத்தி பூரண மனித ஆளுமையாக மாற்றுகின்ற கல்விச் சூழல் அவர்களுக்கு உருவாக வேண்டும்

காலை 7:30 முதல் பிற்பகல் 1:30 வரை அவர்கள் குந்தி இருந்து கற்கின்ற பாடசாலை சூழல் வசதியாக சொகுசாக காற்றோட்டமானதாக விருப்பத்துக்குரியதாக இருக்க வேண்டும். மாறி மாறி பாடங்களை கற்பதற்கு ஏதுவாக அவர்களுடைய மனோநிலையிலும் மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களும் அதற்கு ஏற்றார் போல மாணவர்களை கவரக்கூடிய விதத்தில் அவர்களுக்கான பாடங்களை மாணவர்களுக்கு ஊட்டக்கூடியவர்களாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை முன் கொண்டு செல்ல ஏதுவான இடமாக பாடசாலை சூழல் அமைய வேண்டும்.

இதிலும் குறிப்பாக முதல் ஐந்து வருடங்களிலும் கல்வியை பெறுகின்றவர்களுக்கு நீதியும் நேர்மையும் நியாயமும் விளையாட்டுக்கள் வழியாக சமூக சூழல் வழியாக வழங்கப்பட வேண்டும். சமயத்திலே ஈடுபாடு காட்டக்கூடிய ஒரு சூழல் அவர்களுக்கு வாய்க்க வேண்டும். அவர்களுடைய மொழியாற்றல் அங்கு விரித்து செய்யப்பட வேண்டும். சமூக ஆற்றலும் விருத்தி செய்யப்பட வேண்டும்.

இத்தகைய குழந்தைகளை காயப்படுத்தக்கூடிய நோகடிக்கக் கூடிய கல்வித்திட்டங்களுக்கு எதிராக நாங்கள் முறைப்பாடு செய்ய வேண்டும். அவர்கள் விரும்புகின்ற கல்வித்திட்டங்களை அவர்களது திறமைகளை ஆற்றல்களை ஆளுமைகளை வெளிகொணரக்கூடிய வகையில் கல்வித்திட்டங்களை அமைக்க வேண்டும் பாடப் புத்தகங்களால் பாடச் சுமைகளால் அவர்களை உயிரோடு சாகடிக்க கூடாது. முதுகெலும்புகளை முறிக்கக் கூடாது. முதிர்ச்சி அடையாதவர்களாக முதுமைக்கு செல்ல இடமளிக்கக்கூடாது.

Child friendly school சிறுவர்நேய பாடசாலை ළමා මිතුරු පාසල என்ற கருத்தாக்கம் உண்மையிலேயே நடைமுறைக்கு வர வேண்டும். சிறுவர்கள் எப்பொழுது குதூகலமாக இருப்பார்களோ அப்பொழுதுதான் அவர்கள் இந்த சமூகத்துக்கும் தேசத்துக்கும் கடன்பட்டவர்கள் என்பதனை உணர்வார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஐந்திலேயே நாங்கள் அழுத்தங்களால் வளைத்து விட்டால் 50 ஆன பிறகு அவர்களை நிமிர்த்த முடியாமல் போகும். எனவே பசுமரத்தாணி போல அவர்களுக்கு இந்த சமூகத்திலும் தேசத்திலும் சமயத்திலும் பற்று வர வேண்டுமானால் ஆரம்பக் கல்வியிலேயே அது ஊட்டப்பட வேண்டும்.

இந்த நாட்டை நிமிர்த்தெடுக்கக்கூடிய தலை குனியாமல் காக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் இந்த குழந்தைகள். நாளைய தலைவர்களும் இவர்கள் தான். இவர்களுக்கு சிறந்த ஆரோக்கியமான இலவச கல்வியை சுகாதார திட்டங்களை வழங்குகின்ற பொழுது உடல் உள விருத்தியோடு அவர்களது கல்வி சார் மாற்றங்களும் மேம்பாடு கண்டு இந்த நாட்டுக்கே பணியாற்றக்கூடிய இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்காளர்களாக இருக்கக்கூடியவர்களாக அவர்கள் வருவார்கள்.

எனவே வருடத்தில் ஒரு நாள் மாத்திரம் அவர்களுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கி அந்த நாள் முழுக்க அவர்களுக்கு சுதந்திரத்தை கொடுத்து விடுவதற்கு மாற்றமாக வருடம் முழுவதும் அவர்களுக்குரிய உண்மையான சுதந்திரத்தை கொடுத்து அவர்கள் விரும்புகின்ற ஒரு அழகிய சூழலை கல்விச் சூழல் சமூகச் சூழல் சமயச் சூழல் ஆரோக்கியமான சூழல் போன்றவற்றை அவர்களுக்கு வழங்கினால் நிச்சயம் ஆரோக்கியமான ஓர் எதிர்காலத்திற்கான ஒளிமயமான தலைமுறை நிச்சயம் பாடசாலைகளுக்கூடாக உருவாகும்

இதற்காக பாடசாலைக் கட்டமைப்பை கல்விக் கட்டமைப்பை கலைத்திட்டத்தை மாணவர்களுக்கு உகந்ததாக மாற்றி இந்த உலகம் வேண்டி நிற்கின்ற திறன்களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சூழலை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தால் மாத்திரமே நாளைய தலைவர்களாக வரக்கூடிய இன்றைய சிறுவர்கள் தேசப்பற்று மிக்கவர்களாக ஊழலற்றவர்களாக உறுதியான தலைவர்களாக உண்மைக்கு குரல் கொடுக்கக் கூடியவர்களாக அநீதிக்கு எதிராக பேசக்கூடியவர்களாக மாறுவார்கள்

இதுகுறித்து உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களை சிந்தனைகளை கட்டாயம் பதிவிடுங்கள் இது சமூக விழிப்பூட்டல் சார்ந்த பதிவு மாத்திரமே.

அஹ்மத் பிஸ்தாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *