கம்மல்துறை அல்-பலாஹ்வில் “மீண்டும் பாடசாலைக்கு” (back to school)
கம்மல்துறை அல்-பலாஹ் கல்லூரியின் பழைய மாணவர்கள் கலந்து கொண்ட ‘ மீண்டும் பாடசாலைக்கு’ (back to school) ஆண்களுக்கான நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.10.2024)
நடைபெற்றது.
கல்லூரி அதிபர் எம்.யூ. பாயிஸ் (நளீமி)மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். முன்னாள் அதிபரான ஏ.எஸ்.எம். முஹம்மத் அதிபராகப் பொறுப்பேற்றார்.
பெண்களுக்கான “மீண்டும் பாடசாலைக்கு” நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். முனவ்வர் பொறுப்பேற்றார்.
பாடசாலை காலை கூட்டம் நடைபெற்றபோது பழைய மாணவர்கள் அனைவரும் ‘அகிலமாய் ஜோதியே’என்ற பாடசாலை கீதத்தை இசைத்தார்கள். முன்னாள் அதிபர் ஏ.எஸ்.எம். முஹம்மத் மற்றும் ஆசிரியர்களான சக்கரியா ,இர்ஷாத் ஆகியோர் இந்த நிகழ்விலே உரை நிகழ்த்தினார்கள்.
பழைய மாணவர்கள் வகுப்பறைகளில் ஒன்றுகூடி சுவாரஸ்யமான பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தனர். குழுக்களாக இணைந்து பாடசாலைச் சுற்றாடலை தூய்மைப் படுத்தினர். நான் அ. ஆ . எழுதக் கற்றுக் கொண்ட அந்த பழைய பாடசாலை கட்டடத்துக்குள் நுழைந்தபோதுா எனக்குள் ஒருவித இன்ப அதிர்வலைகள்.
மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் மின்சாரம் போன்று பாய நான் நீண்ட நேரம் அந்தப் பாடசாலைக் கட்டடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆம். அங்குதான் எனது ஐந்தாம் வயதில் ஒரு தமிழ் ஆசிரியை என் விரல்களைப் பற்றி தமிழ் அரிச்சுவடி அ ஆ எழுத்துக்களை எழுதப் பழக்கினார்.
இப்பாடசாலையின் பழைய மாணவர் எம்.ஜே.எம். தாஜுதீன் தலைமையில் நடைபெற்ற மாணவர் மன்றத்தில் பல்சுவை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ்ப் பாடசாலை அதிபர் எம். சி. இர்ஷாத் மற்றும் அறிவிப்பாளர் சல்மான் ஆகியோர் நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.
எமது எதிர்கால கனவுகள் என்ற தலைப்பில் பாடசாலையின் முக்கிய தேவைகள் வீடியோ திரைகள் மூலம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. இத்தேவைகளை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதியளித்து பல மாணவர் குழுக்கள் அவற்றைப் பொறுப்பேற்றனர். நிகழ்ச்சி முடிவில் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோருக்கு பழைய மாணவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இறுதியாக உரையாற்றிய பிரதி அதிபர் M.M. சதீஸ்கான், எதிர்காலத்தில் இப்பாடசாலை ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் இரண்டாகப் பிரிக்கப்படவேண்டும் என்றும் அதன் காரணமாக பல பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றும் கூறினார்.
அதற்காக பழைய மாணவர்களும் பெற்றோர்களும், தனவந்தர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க உறுதி கொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
(எம்.ஜே.எம். தாஜுதீன்)