உள்நாடு

மாணவி தற்கொலை; தாமரைக் கோபுர விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து குதித்து நேற்று (ஒக்டோபர் 7ஆம் திகதி) பரிதாபமாக உயிரிழந்த சர்வதேச பாடசாலை மாணவி, கடந்த ஜூலை இரண்டாம் திகதி அல்டையர் அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இரு மாணவர்களின் நெருங்கிய நண்பர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சிறுமி தனது நண்பர்களின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். மூன்று மாணவர்களும் கொழும்பு சர்வதேச பாடசாலையில் ஒன்றாக கல்விப் பயின்றுள்ளனர்.

எவ்வாறாயினும், நேற்று தற்கொலை செய்து கொண்ட சிறுமி, தாமரை கோபுரத்திற்குள் தனியாக நுழைந்து கண்காணிப்பு தளத்தில் இருந்து குதித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த சிறுமி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவி தரம் 11இல் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நாளன்று, கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள பாடசாலையில் இருந்து வெளியேறி, சீருடையை மாற்றிக் கொண்டு தாமரை கோபுரத்திற்கு சென்றுள்ளார். மாணவியின் பாடசாலைப் பை, சீருடை, காலணி மற்றும் கையடக்க தொலைபேசி என்பன கோபுரத்தின் பார்வையாளர் தளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிறுமி தாமரை கோபுரத்திற்கு அனுமதிச் சீட்டு (டிக்கெட்) வாங்கிவிட்டு 29வது மாடிக்கு சென்று காலணிகளை கழற்றி வைத்துவிட்டு மாலை 3:30 முதல் 4:00 மணிக்குள் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள பாதுகாப்பு கேமரா காட்சிகளில், சிறுமி தாமரைக் கோபுரத்திற்கு வந்து, மேல் தளத்திற்குச் செல்வதையும், குதிக்கும் முன் கண்காணிப்பு தளத்தைச் சுற்றி நடப்பதும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *