தென்னாபிரிக்காவை வீழ்த்திய அயர்லாந்து; இருப்பினும் தொடர் தென்னாபிரிக்கா வசம்
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 69 ஓட்டங்களால் அயர்லாந்து அணி அசத்தல் வெற்றி பெற்ற போதிலும் 2:1 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி தொடரை தனதாக்கியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆகிய தொடர் இடம்பெற்று வந்தது. இதில் முதலில் நிறைவுக்கு வந்த 2 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தது. அடுத்து இடம்பெற்ற 2ஆதும் , இறுதியுமான போட்டியில் அயர்லாந்து அணி 10 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்து தொடரை 1:1 என சமன் செய்திருந்தது.
இந்நிலையில் ஆரம்பித்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று ஒரு போட்டி மீதமிருக்க தொடரை தனதாக்கியிருந்தது. அதற்கமைய தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டி 7ஆம் திகதி பகலிரவு ஆட்டமாக அபுதாபியில் இடம்பெற்றது.
போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தது. இதற்கமைய அணித்தலைவரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான போல் ஸ்டெல்லிங் பெற்றுக் கொடுத்த 88 ஓட்டங்கள் மற்றும் ஹெரி டெக்டர் பெற்ற 60 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் லிஷாட் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் அணர்லாந்து அணி நிர்ணயித்த 285 என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த தென்னாபிரிக்க அணிக்கு ஜேசன் ஸ்மித் 90 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த போதிலும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்குள் பெவிலியன் திரும்பியமையால் அவ்வணியால் 46.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 215 ஓட்டங்களையே பெற்றுக் கொள்ள முடிந்தது. பந்துவீச்சில் கிரஹம் ஹூம் மற்றும் கிறெய்க் யங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதனால் அயர்லாந்து அணி 69 ஓட்டங்களால் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இருப்பினும் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி 2:1 என தொடரை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)