விளையாட்டு

சிக்ஸர் மழை பொழியும் ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடர் மீண்டும் ஆரம்பம்

கிரிக்கெட் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனையவைக்கும் அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடர் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனுமதியுடன் இடம்பெற்றுவந்த ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடர் இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது. பின்னர் இத்தொடர் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதிரடி சிக்ஸர்களை விரும்புகின்ற உலக கிரிக்கெட் ரசிகர்களை 7 வருடங்களின் பின்னர் மகிழ்ச்சிப்படுத்த இத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றமை அவ் ரசிகர்களுக்கு மிகுந்த உட்சாகத்தை கொடுத்துள்ளது.

மேலும் இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அத்துடன் இதுவரையில் இடம்பெற்ற தொடர்களில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தலா 5 முறை சம்பியன் பட்டத்தினை வெற்றி கொண்டு முதலிடத்தில் இருக்க, பாகிஸ்தான் அணி 4 முறை பட்டம் வென்று 2ஆம் இடத்தில் உள்ளது. மேலும் இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் தலா ஒரு முறை சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் இம்முறை மொத்தம் 12 அணிகள் இத் தொடரில் பங்கேற்கின்றமை சிறப்பம்சமாகும். குறிப்பாக இம்முறை ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் முதன்முறையாய் இத் தொடரில் பங்கேற்கின்றன.

அத்துடன் சில முன்னனி அணிகள் தமது அணி வீரர்கள் விபரத்தை அறித்துள்ளது. அத்துடன் வழமை போன்று இத் தொடரின் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய அணிக்கு 6 வீரர்கள் மற்றும் ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீதம் 5 ஓவர்கள் வழங்கப்படும். மேலும் இறுதிப் போட்டியில் ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீதம் 5 ஓவர்கள் வழங்கப்படவுள்ளது.

மேலும் விக்கெட்காப்பாளரும் இத்தொடரில் பந்துவீச்சுக்கு அழைக்கப்படலாம். அத்துடன் துடுப்பாட்ட வீரர் ஒருவர் 31 ஓட்டங்களைப் பெற்றால் அவர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும். பின்னர் மற்றைய வீரர்கள் ஆட்டமிழக்கும் பட்சத்தில் மீண்டும் அவரால் துடுப்பெடுத்தாட முடியும்.

அத்துடன் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டாலும் தனி ஒரு துடுப்பாட்ட வீரர் இத் தொடரில் துடுப்பெடுத்தாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு அகலப்பந்திற்கும், முறையற்ற பந்திற்கும் 2 ஓட்டங்கள் வவழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத் தொடர் டின் குவாங் சாலை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. மேலும் இத் தொடர் குறித்து கிரிக்கெட் ஹாங்காங் தலைவர் புர்ஜி ஷ்ராஃப் குறிப்பிடுகையில், “எங்கள் நகரத்தை உண்மையான உலக நகரமாகவும், கிழக்கு ஆசியாவின் விளையாட்டு தலைநகராகவும் உலகிற்கு வெளிப்படுத்தும் இந்த சின்னமான நிகழ்வை மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *