கட்டுரை

“ஆசிரியர் தினம்” சிறப்புக் கட்டுரை -மனோதத்துவ எழுத்தாளர் அஸ்ஹர் அன்ஸார்..!

உலக ஆசிரியர் தினம் அல்லது சர்வதேச ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஆறாம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக ஆசிரியர் தினத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இவ்வாண்டின் கருப்பொருள்
“ஆசிரியர்களின் குரல்களுக்கு மதிப்பளித்தல்: கல்விக்கான புதிய சமூக ஒப்பந்தத்தை நோக்கி நகர்தல்” என்பதாக அமையப்பெற்று இருக்கிறது.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை உணரச் செய்து சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கை நினைவுபடுத்துவதில் இந்த நாள் எமக்கு பெரும் மகிழ்ச்சியை உணரச் செய்கிறது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஆசிரியர்களின் பங்களிப்பினை கருத்தில் கொண்டு 1994 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தினம் நடைமுறையில் இருந்துவருகிறது.

ஆசிரியர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை பரிசீலிக்கவும், ஆசிரியர்களுக்குத் தேவையான பாராட்டு, மதிப்பீடு மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது

ஆசிரியர்கள் தொடர்பான யுனெஸ்கோ பரிந்துரையின் பின்னர் ஆசிரியர்களுக்கான உதவியை ஊக்குவிக்கவும் ஆசிரியர்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆசிரியர் தினம் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு “சுதந்திரமாக கற்பித்தல்”
என்ற கருப்பொருளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

எமது பிள்ளைகளின் தரமான கல்விக்கும் நடத்தை மாற்றங்களுக்கும் ஆசிரியரின் வழிகாட்டல் மிகவும் முக்கியமானது. மாணவர் வளர்ச்சியில் ஆசிரியரின் செல்வாக்கு கல்விக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது என்பதுவே உண்மையாகும்.

எங்கள் பிள்ளைகளின் கல்வி, சிந்தனை, ஆக்கத்திறன், சமூகம் சார்ந்த வளர்ச்சியை அவர்களின் ஆசிரியரை விட வேறு யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் தான் பிள்ளைகள் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப் படுகிறார்கள்.

எங்கள் பிள்ளைகளின் ஆற்றல்களை வளர்ப்பதில் கல்வியில், நடத்தையில் மாற்றம் ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

எங்கள் பிள்ளைகளின் சிறந்த ஆற்றல்களை வெளிக்கொணர, அவர்களை பயனுள்ள மனிதர்களாக மாற்றியமைக்க, ஆசிரியர்கள் தங்கள் அறிவை, ஆற்றலை, அன்பை, அரவணைப்பை எல்லாம் முதலீடு செய்து, முயற்சிகள் செய்து கடின உழைப்பை மேற்கொள்கின்றமைக்கு எமது உள்ளம் திறந்து மேலான நன்றி உணர்வுகளையும் பிரார்த்தனைகளையும் முன்வைக்கிறோம்.

மாணவர் உணர்வோடும் உள்ளத்தோடும் இணைந்து, அவர்கள் அருகில் இருந்து, வழிகாட்டும் பண்பாளராக தம்மை மாற்றி பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எமது அழகான பிரார்த்தனைகள்.
பாசம் நிறைந்த பாராட்டுக்கள்.
🌷🌷🌷

✒️அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *