Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும், நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 220 இலட்சம் மக்களை பலப்படுத்த வேண்டும். நாட்டுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை சீராக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோமாகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எரந்த வெலியங்கவின் ஏற்பாட்டில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களின் ஆசீர்வாதத்தின் அடிப்படையில்தான் ஜனநாயகப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது. நாட்டை வெல்வதே முதன்மையானதாக அமைய வேண்டும். இந்த அரசியலின் மூலம் நாட்டைப் பலப்படுத்துவதாகவும், 220 இலட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்டு அனைத்துப் பிரஜைகளும் பாதுகாக்கப்பட்டு வளமான நாடு உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கரைச் சந்தித்த போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டோம். வங்குரோத்தடைந்த சந்தர்ப்பத்தில் இருந்து ஒரு நாடாக இந்தியா பெரும் உதவிகளை வழங்கியுள்ளது. அவருக்கு நன்றி தெரிவித்து, மேலும் ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும், இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் நமது நாட்டில் தொழிற்சாலைகளை நிறுவவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய முதலீடுகளை அதிகரிக்குமாறும் தாம் தூதுவரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாம் இன்னும் வங்குரோத்தடைந்த நிலையிலயே இருக்கிறோம். கடன்களை அடைக்க முடியாத ஒரு நாடாகவே உள்ளோம். 2028 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் கடனை செலுத்த வேண்டும். எனவே நாட்டின் வளர்ச்சிக்காக எப்பொழுதும் முன்நிற்க வேண்டும். இதற்கான அதிகபட்ச பணிகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையை உலகில் முதலிடம் பெறச் செய்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்குப் பார்வையாகும். இதற்காக பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். ஒவ்வொரு துறையிலும் முன்னேறி, பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நமக்கு நெருக்கமான இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் அவதிப்படும் நம் நாட்டில் வறுமையைப் போக்க தெளிவான வேலைத்திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். ஏற்றுமதி சார்ந்த தொழில் முறையொன்று உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் இளைஞர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *