உள்நாடு

நன்றியும் பிரார்த்தனையும்

வஹங்கொஹ, ஹந்தெஸ்ஸ, றஹ்மாணியா ஜும்மா மஸ்ஜிதில் இமாமாக பத்தாண்டுகளாக பணியாற்றி விட்டு பிரிந்து போகும் தருணத்தில்…..

‘மற்ற மனிதர்களுக்கு பயனுள்ள மனிதராக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவருக்கு கொடுக்கும் அருள்களில் மிகவும் உயர்ந்த ஒரு அருளாகும்.’ இமாம்
ரிஸ்வான் மெளலவி அவர்களுக்கும் அந்த அருளை அல்லாஹ் கொடுத்து இருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்..

“அல்லாஹ் அவர்களுக்கு செழிப்புடன் வாழும் வாழ்க்கையை வழங்க வேண்டும். அவர்களின் பணிகளை பயனுள்ள பணிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.”

அல் ஹாபிழ் மெளலவி ரிஸ்வான் அவர்கள் உடுநுவரை வஹங்கொஹ மஸ்ஜிதுல் றஹ்மாணியாவில் தொடர்ந்து பத்து வருடங்களாக தலைமை இமாமாக பணிபுரிந்த ஒரு சிறப்பான மனிதர். தஸ்கரை ஹக்காணியா கலா பீடத்தில் 2007 ம் ஆண்டு முதல் முதலாக
பட்டம் பெற்று வெளியான மாணவர்களில் அவரும் ஒருவர். அவர் எலமல்தெனிய கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். அவரின் தந்தை அப்துல் முத்தலிப் ஆவார்.மெளலவி ரிஸ்வான் அவர்கள் ஒரு அமைதியான சுபாவம் கொண்டவர். எல்லோருடனும் அன்பாகவும் மரியாதையுடனும் உறவு பேணி நடப்பதில் ஆசை ஆர்வம் காட்டக்கூடியவர். தனது பணியில் பக்குவம் பேணக்கூடியவர். வஹங்கொஹ கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் போல் எல்லோருடனும் பண்பாகவும் சகோதர உணர்வுடனும் பழகக்கூடிய தன்மை பெற்றவர். இந்த நல்ல குணங்கள் வஹங்கொஹ மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுக்கொள்ள காரணமாக இருந்தது.

கிராம மக்களின் பொருந்தாத விமர்சனத்திற்கும் ஏச்சுப் பேச்சுக்களுக்கும் உட்படாமல் தனது பொறுப்பை பக்குவமாக செய்து மக்கள் உள்ளங்களில் குடிபுகுந்து இருக்கிறார். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என பலரின் நன்மதிப்பை பெற்று பணிபுரிந்தார். அவரை எமது கிராமத்து மக்கள் மஸ்ஜிதின் இமாமாக பார்த்ததைவிட ஒரு மகனைப் போல, சகோதரரைப் போல, நெருக்கமான நண்பரைப் போல் இதயத்தோடு இணைத்து நல்ல உறவுடன் பார்த்துப் பழகியிருக்கிறார்கள். மற்றவர்களிடமிருந்து குறைகள் கேட்காமல், குறைகள் வைக்காமல் முடிந்தவரை அழகாக உறவு வளர்த்து, பணியாற்றியது அவரின் நெகிழ்வான மனிதத் தன்மையின் அடையாளமாகும்.

தொழுவித்தல், குத்பாக்கல் நிகழ்த்துதல், குர்ஆன் கற்பித்தல், கிராமத்தில் நடக்கும் சமூகம் சார்ந்த பணிகளில் பங்கேற்றல் போன்ற ஒவ்வொரு செயற்பாடுகளிலும் மிகுந்த பொறுப்புணர்வுடன் தன்னை முற்படுத்தி பணியாற்றியதை எவரும் மறக்கமாட்டார்கள். வஹங்கொஹ கிராம மக்கள் அவரது பணியை ஏற்று, அவருக்கு உதவி ஒத்துழைத்து, அவருடன் கைகோர்த்து ஒன்றாக பயணித்தது தான் தொடர்ந்து பத்தாண்டுகள் மார்க்கப் பணியிலும் சமூகப் பணியிலும் தன்னால் ஈடுபட முடிந்தது என்று மகிழ்ச்சி உணர்வுடன், கண்ணீர் கசிய பேசியது எங்களை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது. அவரது அந்த வார்த்தைகள் எங்கள் கிராமத்து மக்களின் பணிவையும் அவர்களது அழகான உபசாரத்தின் தன்மைமையும் எங்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

மழை, வெயில், நோய் என்று எதுவும் பார்க்காமல் அவரது பணியில் பக்குவமாய் ஈடுபட்டதும் விடுமுறை எடுப்பதை இயன்றளவு தவிர்த்து தனது பணியை கண்ணும் கருத்துமாக செய்து வந்ததையும் எல்லோரும் அறிவார்கள். அவருக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அழகான குரல் வளத்தை இரசித்துக் கொண்டு மன மகிழ்ச்சியுடன் தொழுகையில் ஈடுபட ஆர்வம் காட்டியவர்கள் பலர் எங்கள் கிராமத்தில் இருக்கிறார்கள். அத்துடன் அவருடைய குத்பாக்கள் காலத்துக்குத் தேவையான தலைப்புகளுடனும் அவற்றுக்கு பொருந்தும் கருத்துக்களுடனும் அமையப்பெற்று இருந்ததடன், அவற்றை அவர் மக்களுக்கு இலகுவாக புரியும் விதத்தில் முன்வைக்கும் பாணியும், நேர முகாமைத்துவமும் அனைவருக்கும் பிடித்திருந்ததால் மக்கள் விருப்பத்தோடும் உற்சாகத்தோடும் செவிமடுத்து நல்ல பல விடயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

ஒரு கிராமத்தில் பத்து வருடங்கள் தொடர்ந்து இமாமாக கடமையாற்றுவது என்பது இலகுவான காரியமல்ல. எமது கிராம மக்களின் மனநிலைகளைப் புரிந்து, அவர்களின் இயல்பான நடத்தைகளை அறிந்து அந்த மக்களோடு பயணிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் அவருக்கு வழங்கியதும், மக்களும் அவருடன் தோழமையுடன் கைகோர்த்து, உதவி ஒத்தாசை வழங்கி பயணித்ததும் அவருக்குப் போன்று அல்லாஹ் எமது கிராம மக்களுக்கும் தந்த ஒரு பேரருளாகும். பிரிவினையோ பாரபட்சமோ காட்டாமல் எல்லோருடனும் ஒன்றுபோல் பழகுவதும், சிரித்த முகத்துடன் ஸலாம் சொல்லிப் பேசுவதும், எவருடனும் அளவு கடந்து ஆழமாக உறவு வைக்காமலும் அதேவேளை தூரமாக இருக்காமலும் எல்லோருடனும் சமனாக, சரியாக, எல்லையை எல்லையாகப் பேணி தனது பணியை பாதுகாப்பாக செய்திருக்கிறார். அல்லாஹ் அவருக்கு அருள் புரிய வேண்டும்.

அவர் எங்கள் கிராமத்தின் எழுச்சிக்காக செய்த ஆன்மீகப் பணிக்காகவும் எங்களுக்கு செய்த உதவிகளுக்காகவும் நாம் ஒவ்வொருவரும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். வஹங்கொஹ மக்கள் தனித்தும் ஒன்றுசேர்ந்தும் உங்களுக்கும், உங்கள் உயர்வான சேவைக்கும் உங்கள் குடும்ப உறவுகளுக்கும் பிரார்த்தனை செய்கின்ற அழகான மனநிலையுடன் இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் அருளும் அன்பும் உங்களுக்கு நிறைவாக கிடைக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறோம்.


இப்படிக்கு பிரார்த்தனையுணர்வுடனும்
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *