9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணம் இன்று ஆரம்பம்; முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை
9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகக் கோலாகளமாக ஆரம்பமாகிறது.
10 அணிகள் பங்கேற்கின்ற 9ஆவது தொடர் பங்களாதேஷில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த குறித்த தொடர் அங்கு நிலவிய போராட்டம் காரணமாக பாதுகாப்பின்மையால் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டது. அதன் படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் டுபாய் ஆகிய இரண்டு இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இன்று (3) ஆரம்பிக்கும் இத் தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இத் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகளாக இடம்பெறவுள்ளது. அதற்கமைய குழு ஏ இல் இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும், குழு பி இல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன.
இதற்கமைய கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல் முறையாக ஆசிய கிண்ணத்தை வெற்றி கொண்ட சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி இன்றைய தினம் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை நேரப்படி 7.30 மணிக்கு சார்ஜா மைதானத்தில் சந்திக்கின்றது.
மேலும் இலங்கை அணி 2ஆவது போட்டியில் பலமிக்க நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணியை எதிர்வரும் 5ஆம் திகதியும், இந்திய அணியை எதிர்வரும் 9ஆம் திகதியும் எதிர்த்தாடுவதுடன், முதல் சுற்று இறுதி லீக் ஆட்டத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மகளிர் ரி20 உலகக்கிண்ணத்தை இதுவரையில் அஸ்திரேலிய அணி 6 முறையும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தலா ஒரு முறையும் வெற்றி கொண்டுள்ளன. அத்துடன் இறுதியாக இடம்பெற்ற 3 தொடர்களிலும் அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை கைப்பற்றியமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.34 மில்லியன் டொலரும்இ ரன்னர்-அப் (இறுதிப்போட்டியில் தோல்வியடையும்) அணிக்கு 1.17 மில்லியன் டொலரும்இ அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு 6 இலட்சத்து 75 ஆயிரம் டொலரும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)