Uncategorized

அரச ஊழியர்களுக்கு நாம் துணை நிற்போம்; ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

வினைத்திறன்மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.

கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு மகத்தானது எனவும், அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே வறுமை ஒழிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியல் சம்பிரதாயம் மற்றும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிரான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், அரச சேவையின் செயற்பாடு தொடர்பான பிரஜைகளின் அதிருப்தி போன்றன தாக்கம் செலுத்தியதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

எனவே, வினைத்திறன் மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் மோசடி மற்றும் ஊழல் இருப்பதாக மக்கள் நம்புவதாகவும், அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள்ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரச கட்டமைப்பு முழுவதும் பரவியுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாகவும், அரச ஊழியர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன் மற்றும் செயற்திறன் மிக்க அரச சேவையை உருவாக்க தற்போதைய அரச உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

அரச சேவையில் இதுகாலவரை இடம்பெற்று வந்த அரசியல் பழிவாங்கல், இடமாற்றம், அரச சேவையில் பதவி உயர்வு வழங்காமை போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறாது என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களை திருப்திப்படுத்தும் வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு அரச உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாற்பது நாட்கள் நிலைமாற்ற காலமாகும் எனவும், அந்த காலப்பகுதியில் அரச சேவையை வீழ்ச்சியடையாமல் பேணுவதற்கு அரச உத்தியோகத்தர் பாடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் இந்த அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி சூசகமாக தெரிவித்தார்.

முன்பிருந்த அரச தலைவர்கள், அரச அதிகாரிகளை ஊடகங்களுக்கு முன்பாக கேள்வி எழுப்பியது போன்று தான் ஊடகங்களுக்கு முன்னால் அரச அதிகாரிகளை கேள்வி கேட்கப் போவதில்லை எனவும், இவ்வாறான ஊடகக் கண்காட்சிகளை தான் ஏற்கவில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். அரசு ஊழியரின் கண்ணியத்தைப் பாதுகாத்து குடிமக்கள் திருப்தியடையும் அரச சேவையை உருவாக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *