“நேர்மையான வேட்பாளர்களுக்காக சமூகம் முன் நிற்க வேண்டும்” (இவ்வார (30.09.2024) உதயம் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நாட்டின் அரசியல் கட்சிகள் தமது அபேட்சகர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இத் தேர்தலில் இளைஞர் யுவதிகளுக்கு இடமளிப்பதற்காக இதுவரைகாலமும் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய பலர் இம்முறை போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளனர். இதனடிப்படையில் இப்படிப்பட்டவர்களின் தீர்மானம் வரவேற்புக்குரியது.
இரு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போதான முக்கிய கோஷங்களில் ஒன்று 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புவதாகும். அப்படி அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்களானால் நாட்டை நடாத்துவதற்கு அனுபவம் மிக்கவர்கள் இல்லாது போகலாம்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள், சண்டாளர்களாக செயற்பட்டவர்கள் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். தற்போது அவ்வாறானவர்களை வீட்டுக்கனுப்புவதற்கான திறப்பு நாட்டின் வாக்காளர்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் செயற்பட்டதைப் போன்று பாராளுமன்ற தேர்தலிலும் நாட்டு மக்கள் தகுதியானவர்களை மாத்திரம் தெரிவு செய்ய வேண்டும்.
அதேபோன்று முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் யாரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவது என்பது பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. பள்ளிவாயல்கள், சமூக இயக்கங்கள் மற்றும் புத்திஜீவிகள் மட்டத்திலும் இக்கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. சில எம்.பீ கள் கடந்த தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள மும்முரமாக செயற்பட்டமையை அவதானிக்க முடிந்தது.
எனினும் கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் எம். பி களின் செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தை வெட்கித்தலை குனிய வைத்தது. கடந்த அரசாங்கம் ஜனாஸாக்களை எரிக்க எடுத்த தீர்மானத்திற்கு கூட கூட்டாக எதிர்ப்பு தெரிவிக்காமல் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை பாதுகாத்துக்கொள்ள சில எம்.பி கள் செயற்பட்டமையை சமூகம் இன்னும் மறந்துவிடவில்லை.
வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி கொண்டுவர முற்பட்டபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டமை, ஒரு கட்சியிலிருந்து தெரிவாகி இன்னும் ஒரு கட்சிக்கு தாவியமை, ஜனாஸாக்கள் இருப்பின் போது சில எம்.பி களின் நடத்தை, குறிப்பாக ஜனாஸாக்களை எரிக்கவில்லை பிரேதப்பெட்டிகளை மட்டும் தான் எரித்தோம் என கூறி சமூகத்தை முட்டாளாக்க முனைந்தமை போன்றவற்றை சமூகம் இன்னும் வெறுப்புடனையே நோக்குகிறது.
அரசியல்வாதிகள் எனும் போது முஸ்லிம் அரசியல்வாதிகள் புறம்பாகவே பார்க்கப்பட வேண்டும்.ஒவ்வொரு முஸ்லிமும் தனது செயற்பாடுகள் குறித்து வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி படைத்த இறைவனுக்கும் பதிலளித்தாக வேண்டும். ஆகவே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் மற்றும் வருங்காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்த இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும். ஐவேளை தொழுகையை நிறைவேற்றுபவர்கள் தொழுகையில் மட்டுமின்றி அன்றாட கருமங்களிலும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி இந்நாட்டில் ஆட்சி பீடம் ஏறி இருக்கிறது. ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஓர் அரசியல் புரட்சியை ஆரம்பித்துள்ள அவர்களுடன் இணைந்து பயணிக்க கூடிய முஸ்லிம் அபேட்சகர்களை சமூகம் தெரிவு செய்ய வேண்டும். தேச நலனை முதன்மையாக கொண்டு செயல்பட கூடியவர்கள் மற்றும் ஊழல் மோசடிகளை வெறுப்பவர்களை தமது பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் தெரிவு செய்ய வேண்டும்.
அதற்குத் தகுதியான முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு முஸ்லிம்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். முன்னொரு காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்றால் கௌரவமும் பெருமையும் இருந்தது. இன்று அந்த நிலை முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த நிலையை மீண்டும் உருவாக்கத் தகுதி பெற்ற அபேட்சகர்களை இம்முறை பாராளுமன்ற தேர்தலில் நிறுத்துவதற்கு முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.
தமது சக்திக்கு அப்பாற்பட்டு அவ்வாறானவர்கள் தெரிவு செய்யப்படாவிட்டால் அவர்களை நிராகரிப்பதற்கு முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும். இன்று நாட்டுக்கு தேவைப்படுவது ஊழலற்ற, நேர்மையான மற்றும் சமூகம் பற்றி தூர நோக்கோடு செயல்படுகின்ற அரசியல் பிரதிநிதிகள் ஆகும். அந்தப் பிரதிநிதிகளை தெரிவு செய்ய நாங்கள் இத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.