ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களுக்கு ஜப்பான் பூரண ஆதரவு. ஜப்பான் தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதி..!
ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்த ஜப்பானிய தூதுவர், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் இரு நாடுகளும் நட்பு நாடுகளாக நெருக்கமாக பணியாற்றவும் உடன்பாடு காணப்பட்டது.
தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க கூறிப்பிட்டுள்ளவாறு ஊழலற்ற மற்றும் சிறந்த ஆட்சியை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருப்பது தொடர்பில் ஜப்பானிய தூதுவர் பாராட்டு தெரிவித்ததுடன், அந்த வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் பூரண ஆதரவை வழங்கும் எனவும் உறுதியளித்தார்.
ஜெயிக்கா நிதியத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) விஸ்தரிப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் போன்ற திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அவர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜப்பானிய மொழியை கற்கவும் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுப்பதாகவும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு