சிறுவர் தின சிறப்புக் கட்டுரை; பிள்ளைகளின் முக்கிய தேவை
எமது பிள்ளைகளை, மாணவர்களை வெற்றிகரமான, நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கு கல்வியின் மூலம் தயார்படுத்துவது தற்கால சமூக சூழலின் முக்கியமான தேவையாகும்.
இன்றைய உலகில் எமது பிள்ளைகளின், மாணவர்களின் ஆசை ஆர்வங்கள், சிக்கல் தீர்க்கும் திறன்கள், விமர்சன சிந்தனை மற்றும் படைப்பாற்றல் உள்ளிட்ட உயர் மட்ட சிந்தனைத் திறன்களை வளர்க்க்கூடய பொருத்தமான கல்வி அனுபவங்களை அவர்களுக்கு வழங்குவது மிகவும் அவசியமானதாக ஆகியிருக்கிறது.
பல சவால்களுடன் மாறிவரும் இன்றைய உலகத்திற்கான கல்வியின் முதன்மை இலக்கு இளைஞர்களை எதிர்கால வாழ்க்கையில் வெற்றிபெறத் தயார்படுத்துவதாகும்.
இன்றைய சமுதாயம் யாரும் கற்பனை செய்யாத மாற்றங்களைக் கண்டுவருவதை காண்கிறோம். இந்த மாற்றங்களை சரியாக எதிர்கொள்ள எமது மாணவர்களுக்குத் தேவையானதை வழங்க கல்வியின் மூலம் பதிலளிக்க நாம் தயாராக வேண்டியுள்ளோம்.
மனிதர்கள் இயற்கையாகவே கற்கும் சுபாவம் உடையவர்கள். கற்பதில் ஆசை ஆர்வத்தை ஊட்டி, எதிர் காலத்தை ஆரோக்கியமாக ஆக்கிக் கொள்ள வழிகாட்டுவது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. கல்வியின் முதன்மை இலக்கு ஆர்வமுள்ள, நெகிழ்வான, ஆக்கப்பூர்வமான, திறனாய்வு சிந்தனைகளை வளர்த்து சிந்தனையுள்ள மனிதர்களை உருவாக்குவதாகும்.
எமது பிள்ளைகளின் பாடசாலை வாழ்க்கை மற்றும் அதற்கு அப்பாலுள்ள வாழ்க்கையிலும் கற்றலுக்கான இயற்கையான குணத்தை உடையவர்களாக அவர்களை வைத்திருக்க கடமைப் பட்டிருக்கிறோம். அதற்காக சிந்தனை ரீதியான, எதிர்கால ஆர்வம் கொண்ட கற்றல் உத்திகளை பின்பற்ற அவர்களை பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறோம்.
இந்த இலக்கை அடைய கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் கற்றலின் உணர்ச்சிகரமான அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டியது தற்கால சூழ்நிலையில் கட்டாயமாகியிருக்கிறது.
கற்றல் சூழலில் நவீன நடைமுறைகள் மற்றும் முறையான நுட்பங்களை உருவாக்குவதன் மூலமும் எதிர்காலத்தை பயனும் பெறுமதியும் உள்ளதாக ஆக்கிக் கொள்ள ஆக்கபூர்வமான சிந்தனைகளை உருவாக்க ஊக்குவிப்பதன் மூலம் மாணவர்களுக்கு தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் அவர்களின் எதிர்காலத்தை பயனும் பெறுமதியும் உடையதாக ஆக்கிக் கொள்ளவும் துணை புரியலாம்.
எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல கல்வி கிடைக்க ஏற்பாடு செய்வது நம் அனைவரினதும் பொறுப்பு.
நன்கு வளம் பெற்ற, சமத்துவமான, தொழில்ரீதியாக இயக்கப்பட்ட பொதுக் கல்வி முறையை அறிமுகமாக்குவது இன்றைய காலத்தில் கட்டாயமானதாக ஆகியிருக்கிறது.
சமத்துவமும் சிறப்பும் எழுச்சியும் உள்ள சமூகத்தை நிர்மாணிக்கவும் அவ்வாறே வெற்றிகரமான, நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு தொழில் ரீதியான, சிந்தனை ரீதியான கல்வியை எம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.
இதற்கான திட்டங்களை பாடசாலை சமூகம், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், நிர்வாக சபைகள், சமூக அறப்பணி அமைப்புக்கள் சேர்ந்து செய்யும் போது அழகான ஆக்கப்பூர்வமான சமூகத்தை கட்டி எழுப்பலாம்.
அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்