ஓட்டமாவடி மஜ்மா நகர் கொரோனா மையவாடி பள்ளிவாயல் மற்றும் பல்துறை கட்டிடம் திறப்பு நிகழ்வு இன்று
கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டமாவடி மஜ்மா நகர் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள கொரோனா மையவாடியில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் மற்றும் பல்துறை கட்டிடம் இன்று (01.10.2024ம் திகதி) அஸர் தொழுகையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஊர் மக்கள் கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக அன்பளிப்பு செய்யப்பட்ட காணியின் ஒரு பகுதியில் இப் பள்ளிவாசலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டு கொரோனா (Covid 19) காலப்பகுதியில் (10.01.2022) காலமான பேருவளை, சீனங்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூமா ஹாஜியானி இரீபதுல் ஹைரா ஸவாஹிரின் (அடக்கஸ்தல இலக்கம் 3,330) ஞாபகார்த்தமாக இப்பள்ளிவாயல் மற்றும் பல்துறை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 17 ஏக்கர் விசாலமான காணியில் இம்மையவாடி அமையப்பெற்றுள்ளதுடன், கொரோனா காலப்பகுதியில் இலங்கை முழுவதிலும் மரணித்தவர்களில் 3,634 உடலங்கள் இம்மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 2,956 உடலங்கள் முஸ்லிம்களுடையதாகும்.
அதில் சீனங்கோட்டையைச் சேர்ந்த பிரபல மாணிக்க வர்த்தகர் மர்ஹும் அப்துல் வதூத் ஹாஜியார் ஹாஜியானி ஜமீலா உம்மா தம்பதிகளின் புதல்வியான ஜனாபா மர்ஹுமா ஹாஜியானி இரீபதுல் ஹைரா ஸவாஹிரும் ஒருவராவார்.
அன்னாரின் ஞாபகர்த்தமாக அவரது கணவர் ஏ.இஸட். எம் ஸவாஹிர் ஹாஜியார் மற்றும் பிள்ளைகளினால் “பைத்துல் ஹைராத்” என்ற நாமத்துடன், அழகிய தோற்றத்தோடு, அனைத்து வசதிகளுடனும் இப்பள்ளிவாயல் மற்றும் பல்தேவைக்கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட (140’X40′) மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்கும் மக்கள் பாவனைக்குமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த பல்துறை கட்டிடத்தை ஏனைய சமூக மக்களும் பயன்படுத்த கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பள்ளிவாயல் திறப்பு விழாவினை அடுத்து கொரோனாவினால் மரணித்தவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் தமாம் யாஸீன் ஸுறா ஓதுதல் மற்றும் துஆ பிரார்த்தனையும் இடம்பெறும்.
நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க். அர்கம் நூர் ஆமித், பொருளாளர் கலாநிதி. அஸ்வர் அஸாஹிம் (அல்-அஸ்ஹரி), முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஸைய்யித் அலி ஸாஹிர் மெளலானா, ஏ.எல்.எம் அதாவுல்லாஹ், முன்னாள் அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், எம் அமீர் அலி, தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் அஷ்ஷெய்க். முனீர் முளப்பர் (நளீமி) உட்பட பிரதேச அரசியல்வாதிகள் ஓட்டமாவடி மற்றும் வாளைச்சேனை உட்பட அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளிவாயல்கள் சம்மேளன நிர்வாகிகள், கோரலைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் ஊழியர்கள், ஊர்த் தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை முக்கியஸ்தர்கள், சீனங்கோட்டை பள்ளிச்சங்க தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் முக்தார் உட்பட உறுப்பினர்கள், ஏ.இஸட்.எம் ஸவாஹிர் ஹாஜியாரின் குடும்ப அங்கத்தவர்களும், உலமாக்கள், புத்திஜீவிகள் பலரும் கலந்து கொள்வர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)