உள்நாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிவிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

முன்னாள் எம்.பி.க்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக குறைந்தபட்சம் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிப்பது என முந்தைய அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, நாட்டில் நிலவும் வன்முறை போக்கு காரணமாக, முன்னாள் எம்.பி.க்கள் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கையை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முந்தைய அரசாங்கத்தின் முடிவை தற்போதைய அரசாங்கம் ஆதரிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *