உள்நாடு

“தேசபந்து” வின் “யுக்திய” நடவடிக்கை உடனடியாக நிறுத்தம்

ஊடகங்களின் ஊடாக பாரிய நாடகமொன்றை அரங்கேற்றிய “தேசபந்து” வின் “யுக்திய” நடவடிக்கை, உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் கீழ், புதிதாக நியமனம் பெற்றுள்ள பதில் பொலிஸ் மா அதிபர், இதனை அதிரடியாக நிறுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டவர், ‘தேசபந்து’ தென்னகோன். புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், ‘யுக்திய’ என்ற பெயரில் மக்களுக்குக் காண்பிப்பதற்காக ஊடகங்கள் ஊடாக நாடகம் ஆடிய ‘தேசபந்து’ தென்னகோனின் பொய் முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பான கடிதமொன்றையும், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, சகல பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அந்தக் கடிதத்தில், இந்த ‘யுக்திய’ நடவடிக்கையின் மூலம், மக்களுக்கு வீணான பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், இதுதவிர பொலிஸ் நிலையங்களில் கூட மக்களுக்கான பணிகள் சரியாகவும் முறையாகவும் இயங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ”யுக்திய’ நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த சகல பாதுகாப்புத் துறையினரையும் உடனடியாக விடுவித்து, மீண்டும் அவரவர் பிரிவு பொலிஸ் நிலையங்களுக்கு இணைத்துக் கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, புதிய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் ”யுக்திய’ பொலிஸ் – இராணுவ நடவடிக்கை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பலரும், தமது மகிழ்ச்சி ஆரவாரத்தைத் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, இந்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய அனைத்து பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் உடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசேட சுற்று நிருபம் ஒன்றையும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, அனைத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *