உள்நாடு

சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேற்வே திறந்து வைப்பு

சாய்ந்தமருது எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேற்வே திறந்து வைக்கும் நிகழ்வு நாளை (01) செவ்வாய்க்கிழமை பாடசாலையில் கோலாகலமாக இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் புதல்வி மரியம் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு கேற்வேயை திறந்து வைக்கவுள்ளனர்.

சாய்ந்தமருது எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்திற்கு மாணவர்களுக்காக கற்றல், கற்பித்தல் உபகரணங்களை வழங்குவதற்காக பாடசாலைக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் புதல்வி மரியம் மன்சூரிடம் பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் கேற்வே ஒன்றைச் செய்து தருமாறு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மரியம் மன்சூர், சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான அந்த வேலைத்திட்டத்தை தனது சொந்த நிதியிலிருந்து செய்து முடித்து, நாளை சிறுவர் தின நிகழ்வில், சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் படிக்கின்ற பாடசாலை சிறார்களுக்காக அதனைத் திறந்து வைத்து அன்பளிப்புச் செய்யவுள்ளார்.

அதேவேளை, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட பொலிவேரியன் மக்களுடன் இணைந்து பாடசாலை சமூகத்தினர் மர்யம் மன்சூர் அவர்களின் சிறப்பான சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்றும் நாளை பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில்,சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி மலிக் உட்பட அதிதிகள், சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் மரியம் மன்சூர் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளித்து, அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *