வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அபிவிருத்திக்குழு நியமனம்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக அபிவிருத்திக்குழு நியமனம் நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 09.08.2024ம் திகதி நியமனம் செய்யப்பட்ட புதிய நிருவாக உறுப்பினர்களின் ஒன்றுகூடலும் புதிய நிருவாகத் தெரிவும் நேற்று 28.09.2024ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
வைத்தியசாலை அத்தியட்சகர் Dr எஃப்.பி.மதன் MBBS
தலைமையில் இடம்பெற்ற புதிய நிருவாகத்தெரிவில் அபிவிருத்திக்குழுவின் தலைவராக குட்வில் தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.லோகேந்திரன், உபதலைவராக கல்குடா அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹாறூன் ஸஹ்வி, பொருளாளராக முதியோர் சங்கத்தலைவர் கே.நடேசன், செயலாளராக வைத்தியாலை நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜெமீல் மற்றும் நிருவாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் போது உரையாற்றிய வைத்தியசாலை அத்தியட்சகர் Dr எஃப்.பி.மதன் MBBS,
புதிதாக நியமனம் பெற்ற உறுப்பினர்களுக்கும் நிருவாகத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், வைத்தியசாலை எதிர்நோக்கியுள்ள அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள், பற்றாக்குறைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.
அத்ததுடன், வைத்தியசாலையில் ஆளனிப்பற்றாக்குறை நிலவுவதனால் மக்களுக்கு சீரான வைத்திய சேவையை வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையுள்ளது.
மாவட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு அடுத்ததாக அதிக நோயாளர் சிகிச்சை பெறுமிடமாக இவ்வைத்தியசாலை காணப்படுவதுடன், தாதியர், சிற்றூழியர் தட்டுப்பாட்டுடன், வெளிநோயாளர் பிரிவினை திறம்பட இயக்கத்தேவையான பெளதீக, ஆளனி வளங்களும் குறைபாடான நிலை காணப்படுகின்றது.
ஆகவே, புதிதாக நியமனம் பெற்றுள்ள அபிவிருத்திக்குழு இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், இன, மத பேதங்களுக்கப்பால் புதிய நிருவாகத்தனர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
புதிதாக நியமனம் பெற்ற அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் வைத்தியசாலையின் சுற்றுச்சூழல் வைத்தியசாலை அத்தியட்சகர் தலைமையில் பார்வையிட்டதுடன், எதிர்வரும் தினங்களின் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனரை அழைத்து வந்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
புதிய நிருவாகத்தினால் பணிப்பாளர் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானஞ் செலுத்தப்பட்டதுடன், எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
தற்போதுள்ள வைத்தியசாலைப் பணிப்பாளர் அர்ப்பணிப்போடு செயலாற்றி வருவதுடன், கடந்த காலங்களிலும் அர்ப்பணிப்புமிக்க சேவைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.