மாயமாய் மறைந்துள்ள 4000 அரச நிறுவன வாகனங்கள்
அரச நிறுவனங்கள் பலவற்றில் காணாமல் போன அல்லது மாயமாய் மறைந்துள்ள 4000 வாகனங்கள் தொடர்பில் விசேட அவதானம் எடுக்கப்பட்டு, தற்போது துரித தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பான முழு அளவிலான அறிக்கையொன்றை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தேடுதல் நடவடிக்கை, அனைத்து அரச நிறுவனங்கள் உள்ளடங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வாகனங்களை யாரெல்லாம் பாவித்தார்கள் என்பது தொடர்பான பூரண விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாதவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் காணாமல் போயுள்ள நிலையில், சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களே, இவ்வாறு கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளதாக, கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.
காணாமல் போன அல்லது மாயமாய் மறைந்துள்ளவற்றில் சுகாதார அமைச்சுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கப்படுகின்ற வாகனங்கள் 1794, இதில் 679 சொகுசு கார்களும் 1115 மோட்டார் சைக்கிள்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கல்வி அமைச்சுக்குச் சொந்தமான வாகனங்கள் 212, நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனங்கள் 880, தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனங்கள் 45 என, மாயமாய் மறைந்துள்ள வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதவிர, இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட 1077 வாகன அனுமதிப்பத்திரங்களின்போதும் நிறைய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதுடன், இவை தொடர்பாகவும் தற்போது மும்முரமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாகவும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.
( ஐ. ஏ. காதிர் கான் )