நாமலின் தேர்தல் பிரசாரத்திற்கு அரச வாகனம் : கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், அத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக் குழுவுக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, இம்முறைப்பாடு மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு மாற்றப்பட்ட நிலையில், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார (தனியார்) கம்பனியின் நலன்புரிப் பிரிவிற்குச் சொந்தமான ‘மொன்டரோ’ ரக ஜீப் வண்டி ஒன்று, ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில், கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு மற்றும் சான்றுகளை வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, கொள்ளுப்பிட்டி பொலிஸார், கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலிக்கு அறிவித்துள்ளதுடன், விசாரணைக்குத் தேவையான உத்தரவுகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாமல் பயன்படுத்திய வாகனம், பழுது பார்ப்புப் பணிகளுக்கு அனுப்பப்படுவதாகத் தெரிவித்தே, இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாகவும், நாமலின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )