செப்.30 முதல் ஒக்.7 வரை தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்பு
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலிலும் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளதால், ஜனாதிபதித் தேர்தலின் போது தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவரும் இந்தத் தேர்தலுக்காக மீண்டும் தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தேவையற்றது என அவர் விளக்கமளித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். “இந்தத் தேர்தலில், கடந்த வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படுவதால், கடந்த வாக்காளர் பட்டியலுக்கு அமைய தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவரும் மீண்டும் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய அனைத்து தரவுகளும் எங்களிடம் உள்ளன.
ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு நீங்கள் சமர்ப்பித்த தபால் மூல விண்ணப்பம் ஏதேனும் காரணத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தால், நிராகரிப்பு தொடர்பான விடயத்தை சரி செய்து மீண்டும் தபால் மூல விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது கடந்த முறை தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், தேர்தல் கடமைகளுக்குப் பணியமர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சேவைப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், அவர்கள் மீண்டும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
குறிப்பாக, சான்றளிக்கும் அலுவலரால் சான்றளிக்கப்பட்ட வாக்காளர்களின் இடமாற்றம், பணி ஓய்வு அல்லது பிற இறப்பு விடயங்களில் வெற்றிடங்கள் மற்றும் புதிதாக வருபவர்கள் தொடர்பான தகவல்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள எமது உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களினால் பெறப்படும்.
பாராளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் அப்படியே செல்லுபடியாகும். 2024 வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய 1,714,354 வாக்காளர்கள் நவம்பர் 14 அன்று வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் எனது பிள்ளைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணைக்குழு என்ற வகையில் நாங்கள் இந்தத் தேர்தலை மிகக் குறுகிய காலத்தில் நடத்த வேண்டியுள்ளது.”