இனவாதம், இன பேதம் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்ற ஜனாதிபதி அநுரகுமாரவின் மக்களுக்கான உரையில் வலியுறுத்தியிருப்பது பெரிதும் பாராட்டப்படும் செயல்..! -ஸ்ரீலங்கா உலமா கட்சி
இனவாதம், இன பேதம் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்ற ஜனாதிபதி அநுரகுமாரவின் மக்களுக்கான உரையில் வலியுறுத்தியிருப்பது பெரிதும் பாராட்டப்படும் செயல் என ஸ்ரீலங்கா உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி கௌரவ ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையின் அண்மைக்கால ஜனாதிபதிகள் வரலாற்றில் சந்திரிக்கா பண்டாரநாயக்காவுக்கு பின் சிறுபான்மை மக்கள் அதிகம் வாக்களித்து வெற்றிபெற்ற ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க உள்ளார்.
மேல் மாகணம், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கணிசமாக இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். தமது பாரம்பரிய கட்சிகளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், அதாவுள்ளாவின் கட்சிகள் பாரிய பிரச்சாரங்களை கொண்டிருந்தும் அக்கட்சிகளின் வாக்காளர்கள் பலர் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கே வாக்களித்துள்ளனர்.
இதற்கு பிரதான காரணம் நாட்டின் ஊழலை ஒழித்து நேர்மையான, இனவாதமற்ற ஆட்சியை உருவாக்குவேன் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி வாக்களித்துள்ளனர்.
எம்மை பொறுத்தவரை இந்த நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு பிரய்ஹான காரணம் இனவாதம் இனக்கலவரங்களுமாகும். இக்கலவரங்கள் காரணமாக பல முஸ்லிம் முதலாளிகள் தமது வியாபார கம்பணிகளை மூடி வெளிநாடு சென்றனர்.
நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி அவர்கள் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து, நல்ல நிர்வாகிகளை நியமித்து இனவாதம் இல்லா நாட்டை கட்டியெழுப்புவேன் என்றும் நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரையில் குறிப்பிட்டிருப்பது பெரிதும் வரவேற்புக்குரியதாகும். அத்தகையதொரு நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு உலமா கட்சியின் ஒத்துழைப்பு என்றும் இருக்கும்.