“பழைய கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி”- உறுதியளிக்கிறார் அமைச்சர் விஜித ஹேரத்
“தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ், பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது” என, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (25) காலை, தனது அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
அவர் அங்கு மேலும் பேசும்போது, “கடந்த காலங்களில் பொலிஸாரின் மீதான மக்களின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றேன். மக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு, புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.
அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் பொலிஸார் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பது, எமது கடமையாகும். இந்த முயற்சியில் பொலிஸ் துறை துணைக் கண்காணிப்பாளர்களும் பெரும் பொறுப்பு வகிக்கின்றனர்.
குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது. அரசியல் செல்வாக்கு இன்றி பொலிஸ் திணைக்களத்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் கட்டாயம் தேவை.
கடந்த காலத்தின் பழைய மற்றும் தவறான நடை முறைகளை மாற்றுமாறு, மூத்த பொலிஸ் துறை அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் முழு ஆதரவை வழங்கும் அதே வேளையில், பொலிஸ் துறை அதிகாரிகளாகிய உங்கள் கடமையானது, சுதந்திரமாக சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதாகும்.
எமது அரசாங்கத்தின் கீழ், அமைச்சர்கள், அரசியல் தலையீடுகளின் ‘பழைய கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி’ வைப்பதாக உத்தரவாதத்துடன் உறுதி அளிக்கிறோம்” என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )