அனுராதபுரத்தையே அதிர வைத்த அனுர
மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தங்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மக்களை பயன்படுத்தி வந்துள்ளதை இந்த மாவட்டத்தின் வெற்றியின் மூலம் தெட்டத் தெளிவாக நிரூபனமாகியுள்ளது.
தேர்தல் மேடைகளில் மற்றுமொருவரை பழிதீர்க்கும் வகையில் மிக மோசமான அருவருப்பான வார்த்தை பிரயோகம் செய்தும் செய்ய முடியாததை செய்ய முடியும் என்ற பொய்யான பிரச்சாரங்களை தேர்தல் மேடைகளில் பேசி வந்த நிலையில் மக்கள் அதனை போலி பிரச்சாரங்கள் என அறிந்து சிறந்த பதிலை வழங்கியுள்ளனர்.
அரசியல் வாதிகள் தங்களை பாதுகாப்பதற்கு மக்கள் மத்தியில் செய்த போலி பிரச்சாரங்களை மக்கள் நிராகரித்து அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக வெற்றி பெறச் செய்து மாவட்டத்தில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாடத்தை கற்று கொடுத்துள்ளனர். மக்களின் வாக்குகளைப் பெற்று தங்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார துறையை விருத்தி செய்தவர்களுக்கும் கட்சி விட்டு கட்சி தாவுகின்றவர்களுக்கும் மக்கள் மாவட்ட ரீதியாக சிறந்த செய்தியொன்றை வழங்கியுள்ளனர்.
மக்களை ஏமாற்றி வாழ்ந்த அரசியல் கலாசாரத்திற்கு சாவுமணி அளிக்கப்பட்டுள்ளதுடன்.அரசியல் வாதிகள் மக்களின் தேவையறிந்து செயற்படுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஊழல் மிக்க கலாசாரத்திற்கும் கட்சி தாவுகின்ற அரசியல் கலாசாரத்திற்கும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் மூலம் சந்தர்ப்பவாத அரசியல் பேசுகின்ற அரசியலுக்கு விடை கொடுக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )