உள்நாடு

பன்னூலாசிரியரும் சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீதுக்கு கலாகீர்த்தி, கலாபுத்ர, தேசபந்து விருது வழங்கிக் கௌரவிப்பு

ஓய்வுபெற்ற ஆசிரியரும் பன்னூலாசிரியரும் சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் அயராத பங்களிப்புகளுக்காக “கலாகீர்த்தி, கலாபுத்ர, தேசபந்து” எனும் கௌரவ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

சர்வதேச மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச பெளத்த சம்மேளனமும் இணைந்து, ‘தேசிய கலை அரண்’ அமைப்பின் ஏற்பாட்டில் “வாழும்போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் கலைஞர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு (16) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போதே, இவர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகமாகச் செயற்பட்ட சமன் ரத்ன பிரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு,
இந்திக விஜய் ரத்ன, மாநகர முதல்வர் கஜீவ மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் சுனில் பெரேரா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் கலை மற்றும் சமூகப் பணிகள் ஆற்றிவரும் “கண்ணகி கலாலயம்” தமது ஐக்கிய சுயதொழில் வியாபாரிகள் சங்கம் கலையரண் இவர்களோடு தேசிய கலை அரண் ஒன்றிணைந்து ஏற்பாடுகளைச் செய்ததுடன் இவ்வமைப்புகளின் தலைவர் ஏ.கே. இளங்கோ மற்றும் உப தலைவர் ஏ. சுரேஷ் அவர்களோடு குழுவினர்களும் இணைந்து இதன் திட்டத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *