பாராளுமன்றம் இன்றிரவு கலைகிறது; நிதி மற்றும் நீதி உட்பட 6 அமைச்சுக்கள் ஜனாதிபதி வசம்
பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறியமுடிகின்றது.
பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று அவர் உட்பட நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி திஸாநாயக்க சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இலாகாக்களை வைத்திருப்பார், அதே நேரத்தில் பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக இருப்பார்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் பல அமைச்சுகளுடன் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அனுரகுமார திஸாநாயக்கவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நிபுன ஆராச்சி நேற்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்த பிறகு, எப்போது வேட்புமனுக்கள் கோரப்படும் என்ற திகதியை அவர் நிர்ணயிப்பார் என்றும் NPP தகவல்கள் தெரிவித்தன. இந்த திகதிக்குப் பிறகு, வேட்புமனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 10 முதல் 17 நாட்கள் கால அவகாசம் வழங்கும்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நேற்றுக் காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, முப்படைத் தளபதிகளையும் அதன் பின்னர் தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இன்று இரவு அவர் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.