உள்நாடு

அனுரவின் வெற்றிக்கு பங்களித்த பேருவளை பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவியேற்பு நிகழ்வை அடுத்து வாக்களித்த பேருவளை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விஷேட கூட்டமொன்று பேருவளை சீனங்கோட்டை நெளபர் மாவத்தையில் 23ம் திகதி இரவு நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் சீனங்கோட்டை பகுதி முக்கியஸ்தர் மபாஸின் அஸாஹிரின் இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பேருவளை நகரசபை முன்னாள் உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட முக்கியஸ்தருமான அல்-ஹாஜ் அரூஸ் அஸாத், ரம்ஸான் சிஹாப்தீன், ஜீவன் சம்பத் மற்றும் கெனத் ஆசிரியர் உட்பட இக்கைட்டத்தில் பலரும் இங்கு உரையாற்றினர்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த வாக்களித்த பேருவளை வாழ் மக்களுக்கு இதன்போது நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

பேருவளை தொகுதியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எல்லா வேற்றுமைகளையும் மறந்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக எம்மோடு கைகோர்த்து செயல்பட்டனர். சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவும், உயர்ந்த அரசியல் கலாசாரமொன்றை தோற்றுவிப்பதற்காக வேண்டி நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியோடு கைகோர்த்தனர். இந்த தேர்தலில் ஒத்துழைத்ததை விட எதிர்வரும் பொதுத் தேர்தலில் பல மடங்கு ஒத்துழைப்பை நாம் மக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து தாய் நாட்டை கட்டியெழுப்ப அணி திரள்வோம்.

பேருவளை நகர சபை முஸ்லிம் பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தார்கள். சிங்கள, தமிழ் சகோதரர்களும் வாக்களித்தார்கள். எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒன்றாய் கைகோர்த்து சகோதரர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கூடிய வாக்குகளை பெற்றுக் கொடுத்தமை குறித்து நன்றியுடன் ஞாபகப்படுத்துகிறோம்.

இரவு பகல் பாராது தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டவர்கள், வாக்களித்தவர்கள் அனைவரையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என இங்கு உரையாற்றிய அரூஸ் அஸாத் தெரிவித்தார். நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கவும், வீழ்ந்துள்ள தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்காகவும் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் சகோதரர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தெளிவான ஆணையைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். மக்கள் வழங்கியுள்ள மிகத் தெளிவான ஆணையின் மூலம் சிறந்த அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.

நாட்டு மக்கள் ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்தி அவரின் பயணத்தை முன்னெடுக்க ஒத்துழைக்க வேண்டும். பேருவளை தொகுதியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியமையானது ஒரு வரலாற்றுச் சாதனையாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கூட்ட இறுதியில், பங்கு பற்றியோர்கள் கை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *