ஜனாதிபதி அநுரவுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் : சபாநாயகர்
“தமது நாட்டை, எதிர்கால உலகத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கான புதிய தலைவராக, அநுர குமார திஸாநாயக்கவை இலங்கைப் பிரஜைகள் தெரிவு செய்துள்ளார்கள் என்பது, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க அவர்கள் வெற்றிபெறுவதற்கு, நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது வாக்குகளை மிகவும் அமைதியான முறையில் பயன்படுத்தியிருப்பதன் ஊடாக, மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது தனது அவதானிப்பு” என்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
“மோசமான தேர்தல் வன்முறைகள் இன்றி இதுபோன்ற பெறுபேற்றைப் பெற்றமைக்கான கௌரவம், வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்த எமது ஜனாதிபதி வேட்பாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்” என்றும், “தேர்தல்கள் ஆணைக்குழு, முப்படையினர், பொலிஸார் தலைமையிலான பாதுகாப்புத் தரப்பினர், பொது மக்கள் ஆகியோருக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த உண்மையான வெற்றி” என்றும் சபாநாயகர் தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் மேலும் தனது வாழ்த்துச் செய்தியில்,
“அநுர குமார திஸாநாயக்க மீது மக்கள் கொண்டுள்ள இந்த நம்பிக்கை ஒரே இரவில் ஏற்பட்டதொன்றல்ல. பாராளுமன்ற ஜனநாயகத்தில் நீண்டகாலம் ஈடுபட்டதனால் ஏற்பட்ட விளைவின் பலன் இதுவாகும்.
தற்பொழுது அவர் முன்னிலையில் காணப்படுவது, இலகுவான சவால் அல்ல என்பதுடன், எமது சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பின் மாறுபாடுகளை நன்கு அறிந்திருந்தாலும், உலகளாவிய பூகோள அரசியல் போக்குடன் முரண்படாமல் திஸாநாயக்க அவர்களுக்கு இந்த நீண்ட காலப் பயணத்தை, நிலையான முறையில் மேற்கொள்வதற்குத் தேவையான அரசியல் உறுதிப்பாடு உள்ளது என்ற நம்பிக்கை, தனக்கு உண்டு.
புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் இலங்கை ஆரம்பிக்கும் இந்தப் புதிய பயணத்திற்கு, தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகிய பாராளுமன்ற செயலாளர் குழாமும், இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயகவுக்கு, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்” என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )