2030 ஐ வெற்றியாக்க தொடர்ந்தும் முன்னேற்றப் பாதையில் சவுதி அரேபியா
“சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினம் இன்று (23.09.2024). சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினத்திற்கு நல்வாழ்த்துக்கள்”
“இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், இளவரசரும் பிரதமருமான முஹம்மத் இப்னு சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோருக்கும் சவுதி மக்களுக்கும் அந்நாட்டின் 94வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கை மக்கள் சார்பாகவும் எமது நிறுவனம் சார்பாகவும், தனிப்பட்ட ரீதியிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”.
பொருளாதார ரீதியிலும், அபிவிருத்தியிலும் பாரியளவில் முன்னேற்றமடைந்துள்ள சவுதி அரேபியா மனிதாபிமானத்திலும் என்றும் முன்நிற்கும் நாடாக உள்ளது. அந்நாட்டின் அபார வளர்ச்சியைக் கண்டு உலகமே பெருமிதம் அடைகிறது. சவுதியின் முன்னேற்றம், பாரிய வளர்ச்சி, மறுமலர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய எண்ணற்ற சாதனைகள் என்பன உலகமே அந்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குறிப்பாக மன்னரதும் இளவரசரதும் தலைமை மற்றும் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் ‘நியோம்”, ‘த லைன்”, ‘2030 விஷன்” 2030 எக்ஸ்போ போன்ற பொருளாதார வேலைத்திட்டங்கள் சவுதியின் நற்பெயரை பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் பெரிதும் உயர்த்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் முன்னேற்றத்துக்கும் அபிவிருத்திக்கும் அந்நாட்டை ஆட்சி செய்த அனைவரும் அயராது உழைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் என்றும் நினைவுகூறப்பட வேண்டியவர்களாவர். என்றாலும் தற்போதைய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸும் இளவரசர் முஹம்மத் பின் சல்மானும் அளித்துவரும் பங்களிப்புக்களும் அர்ப்பணிப்புகளும் வரலாற்றில் அழியாத்தடம் பதிக்கும் என்பதை உறுதிபடக்கூறலாம்.
அதேநேரம் சவுதி அரேபியாவானது பிராந்திய நாடுகளுடன் மாத்திரமல்லாமல் உலகின் அனைத்து நாடுகளுடனும் சினேகபூர்வமான நட்புறவைப் பேணி வருகிறது. அந்த வகையில் இலங்கைக்கும் சவுதிக்கும் இடையிலான நட்புறவு மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உட்பட பல்துறைகளின் முன்னேற்றகளுக்கும் பாரிய நிதிப் பங்களிப்பை சவுதி நல்கி வருகிறது. குறிப்பாக சவுதி உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கும் அனைத்து மனிதாபிமான உதவி, ஒத்துழைப்புகளும் இலங்கை மக்களுக்கும் அளிக்கப்படுகிறது.
குறிப்பாக கொழும்பு பெரியாஸ்பத்திரியில் காக்கைவலிப்பு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான நரம்பியல் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அதி நவீன கட்டடங்கள், கிண்ணியா பாலம், கிழக்குக்கான நீண்ட நெடுஞ்சாலை, அரச பல்கலைக்கழகங்களுக்கான கட்டிடங்கள், சுனாமி, கொரோனா மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போதான மனிதாபிமான உதவிகள், சவுதி அரேபிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களுக்கு மேற்படிப்பைத் தொடர ஒவ்வொரு வருடமும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றமை, நோன்பு காலங்களுக்கென ஆயிரக்கணக்கான தொன்கள் பேரீச்சம்பழத்தை இலவசமாக வழங்குகின்றமை, பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்துக்கு 300 தொன்கள் பேரீத்தம் பழம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கியமை என்பன சுட்டிக்காட்டத்தக்கவையாகும்.
அத்தோடு இலங்கையில் முதற் தடவையாகப் பெருந்தொகைப் பணப்பரிசில்களுடன் கூடிய குர்ஆன் மனனப்போட்டி, இலங்கை – சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு ஒன்றியம், இலங்கை – சவுதி அரேபிய பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள், எல்லைகள் இல்லாத மனித நேயத்தை நோக்கி என்ற தொனிப்பொருளில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் ஊடாக இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு இலவச கண் சத்திர சிகிச்சைகள், சூடான் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டு அவரவர் நாட்டுக்கு சவுதி அனுப்பி வைத்தது. அவர்களில் இலங்கையரும் அடங்குவர். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளின் போது சவுதி இலங்கைக்கு ஆதரவளித்தமை என்றபடி சவுதியின் இலங்கைக்கான உதவி, ஒத்துழைப்புக்கள் நீண்டு செல்கிறது.
இவை இவ்வாறிருக்க சவுதி அரேபிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இலங்கைக்கும் வருகை தருகின்றனர். இது இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பாக அமைந்துள்ளது. இவ்வாறான உதவி, ஒத்துழைப்புக்கள் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது.
மேலும் உலக முஸ்லிம்கள் தங்கள் பிரதான கடமைகளில் ஒன்றாக விளங்கும் ஹஜ் கடமையை நிறைவேற்றும் கஃபா அமைந்துள்ள மக்காவும் முஸ்லிம்கள் புனித யாத்திரை மேற்கொள்ளவென அங்கீகரிக்கப்பட்டுள்ள மக்கா, மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி அமைந்துள்ள புனித பூமியாகவும் சவுதி விளங்குகிறது. முஸ்லிம்களின் புனிதஸ்தலங்கள் அமைந்திருப்பதால் உலக முஸ்லிம்களின் மனதில் தனியிடம் பிடித்த நாடும் அதுவே அதுவாகும். மத்திய கிழக்கு நாடுகளில் சவுதிக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.
அதேநேரம் உலக முஸ்லிம்களின் சகல விடயங்களிலும் அக்கறை செலுத்திவரும் சவுதி, உலகலாவிய ரீதியில் மனிதாபிமான உதவி, ஒத்துழைப்புக்களை முன்னெடுக்கும் முதன்மை நாடாகவும் விளங்குகிறது. உலகில் முஸ்லிம் அல்லாத நாடுகளின் நலன் விடயங்களிலும் மிகுந்த அக்கறை செலுத்தி அந்நாடுகளோடும் பரஸ்பர உறவுகளைப் பேணி வருகிறது. உலக வல்லரசு நாடுகளுடனும் மிகப் பலமான உறவுகளைக் கொண்டுள்ள சவுதியுடன், வல்லரசு நாடுகளும் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றன.
மேலும் தீவிரவாதம் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கியெறிந்து சகிப்புத்தன்மை சகவாழ்வை உலகில் நிலைநாட்டிய மிகச் சிறந்த நாடாகவும், போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பில் வெற்றிகண்ட நாடும் திகழுகிறது சவுதி. தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் சர்வதே மாநாடுகளை வருடாவருடம் சவுதியிலும் உலகின் பல நாடுகளிலும் தொடர்ந்தும் நடாத்தி வருகிறது சவுதி அரேபியா.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தீவிரவாதத்தை ஒழித்து சகிப்புத்தன்மையை நிலைநாட்ட புனித மக்காவில் சர்தேச மாநாடொன்றை நடாத்திய சவுதி, இம்மாதம் முதல் வாரத்தில் ஒரு வார காலத்திற்குள் ஏழு நாடுகளில் தீவிரவாத்ததை ஒழித்து சகிப்புத் தன்மையயை நிலைநாட்டவென ஏழு மாநாடுகளை நடாத்தியும் சாதனை படைத்ததுள்ளது.
மேலும் நிர்க்கதியான நாடுகளுக்கு உதவுதல், அந்நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாடுகளின் திறைசேரிகளில் வட்டியில்லா நீண்ட கால தவணையில் கடன் அடிப்படையில் பல பில்லியன்களை வைப்பிலிடுதல், உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் தலையிட்டு அங்கு சமாதானத்தை நிலை நாட்டுதல் போன்றவாறான ஒத்துழைப்புக்களை முன்னெடுக்கிறது.
குறிப்பாக பலஸ்தீன மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் சவுதி முன்னணியில் திகழுகிறது. அத்தோடு நவீன கண்டுபிடிப்புகள், ஏ ஐ தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு போன்றவற்றிலும் சவுதி மிக முன்னேற்றமடைந்த நாடாக விளங்குகிறது. அந்த வகையில் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை சர்வதேச மாநாடொன்றை சவுதி அரேபியா நடாத்தி உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது.
அரசியலில் சவுதி அரேபியா மிகப் பலம் வாய்ந்த நாடாகும். அதனால் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் உலக முஸ்லிம் நாடுகளும் சவுதியை தங்களது தலைமைத்துவ நாடாகக் கருதுகின்றது.
இவ்வாறான பின்னணியில் சவுதியை பொருளாதார மற்றும் இதர அனைத்து துறைகளிலும் முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆரம்பித்த 2030 விஷன் எக்ஸ்போ 2030 போன்றன குறிப்பிடத்தக்கவையாகும்.
2030 சவுதி விஷன் என்பது ஒரு துடிப்பான சமூகம், வளமான பொருளாதாரம் மற்றும் இலட்சிய தேசத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட பயணத்திற்கான ஒரு வரை படமாகும். அதேபோன்று எக்ஸ்போ 2030 முன்னோடியான வகையில் தேசிய மாற்றத்தை அடைவதற்கான சவுதிக்குக் கிடைக்க இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
பொருளாதார ரீதியில் சவுதி அரேபியா தன்னிறைவடைந்து வருவது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அதனால் தான் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் சவுதியின் பொருளாதாரக் கொள்கையோடு இணைந்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளத் தொடர்ந்தும் சவுதியோடு மிகவும் நெருங்கிச் செயற்படுகின்றன. இதற்கு ஜி 7 நாடுகள் அமைப்பு மற்றும் ஜி 20 அமைப்பு நாடுகளின் மாநாடுகள் நல்ல எடுத்துக்காட்டுக்களாகும்.
சுருங்கக் கூறின் உலகில் அனைத்து நாடுகளுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தாக்கம் செலுத்தும் மிக முக்கியமான நாடாக சவுதி விளங்குகிறது.
உலகிலுள்ள பெற்றோலிய வள நாடுகளில் சவுதியும் ஒன்றாகும். என்றாலும் பெற்றோலிய வளம் சாராத உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சவுதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இரு புனித பள்ளிவாசல்களின் காவலரும், மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோர் இவ்விடத்தில் அதிக அக்கரை எடுத்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் பதவிக்கு வந்த பின்னர் சவுதியின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான சூழலில் 94 வது தேசிய தினத்தைக் கொண்டாடும் சவுதியின் மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், இளவரசர் முஹம்மத் இப்னு சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோருக்கும், சவிதி மக்களுக்கும் இலங்கை மக்கள் சார்பிலும் தனிப்பட்ட ரீதியிலும் எமது நிறுவனம் சார்பிலும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கு ஈடேற்றமான வாழ்வையும் நீண்ட ஆயுளையும் சிறப்பான எதிர்காலத்தையும் தந்து மென்மேலும் உலக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய நல்ல திடகாத்திரத்தையும் தரவும், சவுதி-இலங்கை நட்புறவு என்றும் நிலைத்து வலுவானதாக இருக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தின்றேன்.
அஷ்ஷைக் எம்.எச் ஷைஹுத்தீன் பி.ஏ. மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு