உள்நாடு

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இலங்கையில் பெண் பிரதமர்; கூடிய விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, 2024 டிசம்பர் மாதத்துக்குள் பொதுத்தேர்தல்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர், அமையவுள்ள உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளார்.
அதனையடுத்து, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளார். அதன்பின்னர், தற்போதைய அமைச்சரவை கலைந்துவிடும் எனத் தெரியவருகின்றது.


பொதுத்தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அமையும் வரை செயற்படும் இடைக்கால அரசில், 4 பேர் கொண்ட உறுப்பினர்கள் 15 அமைச்சுகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர் எனவும் அறிய முடிகின்றது.
இலங்கை அரசியல் வரலாற்றில், இதற்கு முன்னர் இரு பெண்கள் மாத்திரமே பிரதமர் பதவிகளை வகித்துள்ளனர்.


அதாவது, 1960 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி முதல் 1965 மார்ச் 25 ஆம் திகதி வரை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமர் பதவியை வகித்துள்ளதுடன், ‘உலகின் முதல் பெண் பிரதமர்’ என்ற பெருமையையும் இவர் பெற்றுக் கொள்கிறார்.


அதன்பிறகு, 1970 முதல் 1977 வரையும் இவரே பிரதமராக பதவி வகித்தார். அதன்பின்னர், 1994 ஆகஸ்ட் 19 ஆம் திகதி முதல் 1994 செப்டம்பர் 12 ஆம் திகதி வரை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமராகப் பதவி வகித்தார்.


ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா வெற்றி பெற்றதும், தனது தயாரான ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவை சந்திரிக்கா பிரதமராக்கினார். 1994 நவம்பர் 14 ஆம் திகதி முதல் 2000 ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை ஸ்ரீமாவோ பிரதமராகச் செயற்பட்டார்.


2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ரத்னசிறி விக்கிரமநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, தி.மு. ஜயரத்ன மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதமர் பதவிகளை வகித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, இலங்கையில் பெண்ணொருவர் பிரதமராகப் பதவி ஏற்கின்றார்.
கூடிய விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, 2024 டிசம்பர் மாதத்துக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *