உள்நாடு

அனைவரையும் தாய் நாட்டு மக்களாக மதித்து ஆட்சி செய்வேன்; தேர்தல் திணைக்களத்தில் ஜனாதிபதி அனுர குமார உறுதி

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க மக்கள் ஆணை கிடைத்துள்ளது. நல்ல அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். என்னை ஆதரித்த மற்றும் ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் சகலரையும் தாய்நாட்டு மக்களாக மதித்து ஆட்சி புரிவேன் என்று நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று இரவு (22) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தும்மாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்காக முக்கிய பங்காற்றிய தேர்தல் ஆணைகுழுவுக்கு நன்றிகள்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளோம். இந்த நெருக்கடிக்கு தீர்வை வழங்க மக்களின் ஆணையுடன் ஆட்சியமைக்க வேண்டி இருந்தது. அந்த மக்கள் ஆணை தற்போது கிடைத்துள்ளது.

வன்முறை அற்ற தேர்தலை நடத்த கிடைத்தமையும் எமது வெற்றியாகும். தேர்தல் நடத்தும் முறையும், தேர்தல் வெற்றியை கொண்டாடும் கலாசாரமும் மாற்றமடைய வேண்டும். தேர்தலின் பின்னரான வன்முறைகளும் இடம்பெற கூடாது. எதிர்வரும் நாட்களில் அவ்வாறான வன்முறைகள் இடம்பெற கூடாது. அதற்காக எங்களின் ஒத்துழைப்பை நாங்கள் வழங்க வேண்டும்.

எம்மிடம் பாகுபாடு இருக்க கூடாது. மக்களின் எதிர்காலத்துக்காக சகல கட்சிகளுடன் இணக்கத்துடன் கலந்துரையாடி முன்னோக்கி செல்ல எதிர்பார்க்கிறோம். எமது மக்கள் இந்த தேர்தலில் நேரடியாக பங்குபற்றி இருந்தார்கள். நல்ல அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். என்னை ஆதரித்த மற்றும் ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் சகலரையும் தாய்நாட்டு மக்களாக மதித்து ஆட்சி புரிவேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *