நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது இலங்கை
நியூசிலாந்து அணிக்கு எதிரான2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சகலதுறையில் பிரகாசித்த இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இடம்பெற்றுவரும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பித்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 275 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 71.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை மட்டுமே பெற்று 63 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய இரண்டாம் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததுடன், இந்தப் போட்டியில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது.
இதன்படி, முதல் இன்னிங்சில் இலங்கை அணி 305 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 114 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 340 ஓட்டங்களை பெற்றிருந்தது. அந்த அணி சார்பில் டொம் லாதம் 70 ஓட்டங்களை குவித்திருந்தார்.
தொடர்ந்து 35 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 309 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்திருந்தது.
இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 275 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், அந்த அணியால் 211 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்ததுடன், 63 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக பிரபாத் ஜயசூரிய தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இவ் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)