தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு..!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவற்றில் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல், மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய, தேர்தல்கள் ஆணைக்குழுவும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்று நம்புவதாக, தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்தக் கட்சி இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்கு, பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவு நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பகல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை தேர்தல் முடிவுகள் வௌியாகும் போது, பொது மக்கள் அமைதியைப் பேணும் நோக்கில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி, தேர்தல் முடிவுகளின் பின்னர், நாட்டினுள் அமைதியான சூழலைப் பராமரித்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், பாதுகாப்புப் பிரிவினரிடம் கோரும் நிலையில், நாட்டினுள் அமைதியைப் பாதுகாப்பதற்காக முழுமையான ஆதரவினை வழங்குமாறும், தேசிய மக்கள் சக்தி, பொது மக்களிடம் மேலும் கோரியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )